சார்பட்டா பரம்பரை திரைப்படம் சமூக வலைதளங்களின் தற்போதைய பேசு பொருளாக உள்ளது. அப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் மீனவர்களின் வரலாற்றை மறைத்து இருப்பதாக சோளகர், வாழும் மூதாதையர் உள்ளிட்ட நூல்களை எழுதிய எழுத்தாளர் பகத்சிங் புகார் தெரிவித்துள்ளார். ’சார்பட்டா உண்மை வரலாறு என்ன?’ என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அதில், “சார்பாட்டா பெயருக்கான பொருளை அறிய பலரும் முற்படுகின்றனர். சரியான விளக்கத்தை கண்டடைய முடியவில்லை. ஆனால் அது யாரை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்பது கேள்வியினால் நிறைவான பதிலை கண்டடையலாம். மெட்ராஸ் குத்துச்சண்டைக் களத்தில் கோலோச்சிய சார்பட்டா பரம்பரையில் பல சமுதாயத்தை சார்ந்த வீரர்கள் இருந்தாலும்  வீழ்த்த முடியாத வீரர்களாக நீண்டகாலம் களத்தில் நின்றவர்கள் பெரும்பாலும் மீனவர்கள் தான். சார்பட்டா பரம்பரையின் மையம் இராயபுரம், பனைமரத்தொட்டி பகுதிதான். இன்றும் சென்னை பாக்ஸிங் வட்டாரத்தில் சார்பட்டா என்றால் அது மீனவர் கோதா என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. 




மெட்ராஸ் பாக்ஸர்களில் பலருக்கும் சிம்மச் சொப்பனமாக விளங்கியவர் ஆங்கிலோ இந்திய வீரரான நாட்டெர்ரி. அவரது ஸ்டைல்,  கால் அசைவு, நுணுக்கமான சண்டைக்கு பெயர் பெற்றவர்.  ஆங்கிலோ இந்தியன் வீரரான டெர்ரியை முதன் முதலில் வீழ்த்தியவர் கித்தேரி முத்து எனும் மீனவர். முத்துவின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி  ஆல்பர்ட் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ”திராவிட வீரன்”என்ற பட்டத்தை தந்தை  பெரியார் அவருக்கு சூட்டினார். அண்ணாதுரை கித்தேரி முத்துவை வாழ்த்தி பேசினார். சார்பட்டா பரம்பரையில் அதிக புகழ்பெற்றவராக கித்தேரி முத்து இருந்தார். எம்.ஆர்.இராதா, பாரதிதாசன் போன்றவர்கள் கித்தேரி முத்துவை நேரில் வந்து சந்திப்பார்களாம். இருவரும் குத்துச்சண்டை ரசிகர்கள் என்பதால் கித்தேரி முத்துவிடம் நல்ல நட்பினை கொண்டிருந்தனர் என்ற தகவலை புலவர் பா. வீரமணி பதிவு செய்திருக்கிறார்.


கித்தேரிமுத்துவுக்கு பிறகு மீண்டும் டெர்ரியை வீழத்தியது ஜென்டில்மேன் பாக்ஸர்  என்று பெயர் பெற்ற  ”டாமிகன்” சுந்தர்ராஜன் அவர்கள்.  அவரது சந்ததியினர் இப்போதும் ராயபுரம் பகுதியில் குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகின்றனர். அதே போன்று கித்தேரி முத்து அவர்களின் மகன்கள் அன்புமுத்து, அருமைமுத்து ஆகியோர் காசிமேடு ஜிவா நகர் பகுதியில்  பாக்ஸிங் கிளப் வைத்திருந்தனர்.


சார்பட்டா பரம்பரையில் புகழ்பெற்ற மற்றொரு பாக்ஸர் ஆறுமுகம் அவர்கள். தான் பங்கேற்ற 120 போட்டிகளில் 100 போட்டிகளில் நாக்அவுட் செய்து சாதனை படைத்தவர். இவரை தொடர்ந்து பாக்சர் வடிவேல், செல்வராஜ் என சார்பாட்டா பரம்பரையில் பங்களிப்பு செலுத்திய மீனவர்களின் பட்டியல் மிக நீளம். உலகக்குத்துச் சண்டை வீரர் முகமது அலி சென்னை வந்தபோது நேரு ஸ்டேடியத்தில் நடந்த காட்சி போட்டியில் அவருடன் மேடை ஏறி சண்டை இட்டவரும் பனைமரதொட்டியை சார்ந்த  பாக்ஸர் பாபு என்ற மீனவர் தான்.


மீனவர்களை தவிர்த்து பிற சமுதாயத்தினரும் சார்பட்டா பரம்பரையில் பங்களித்துள்ளனர். அதில்  அருணாச்சலம், மாசி, ஜெயவேல் போன்ற பலரும் பங்களிப்பு செலுத்தியுள்ளனர். சார்பட்டா பரம்பரையிலேயே டேன்சிங் ஏழுமலை என்ற தரமான பாக்ஸர் இருந்துள்ளார். இப்போதும் ராயபுரம், சென்னை துறைமுகம் சுற்றியுள்ள பகுதி சேர்ந்த பெரியவர்கள் பலரும்  பாக்சர் அருணாச்சலம் அவர்களை பற்றி பேச கேட்கலாம். தலித் சமுதாயத்தில் இருந்து சார்பட்டா பரம்பரையில் புகழ்பெற்ற வீரர்களில் அருணாச்சலம், அந்தோணி ஜோசப் போன்றவர்கள் முதன்மையானவர். 


ஆங்கிலோ இந்திய குத்துச்சண்டை வீரரான நாட்டெர்ரியுடன் நடந்த போட்டியில் மேடையிலேயே அருணாச்சலம் அவர்கள் உயிரிழந்தார். அவரது வீர மரணத்திற்கு இரண்டு மாதங்கள் கழித்து டெரியை கித்தேரி முத்து வீழ்த்தினார். இந்த போட்டிக்கு பிறகுதான் கித்தேரி முத்து மிக பிரபலம் அடைந்தார். இப்படி சார்பட்டா பரம்பரை மீனவர்களின் அடையாளமாக இருக்கையில், அப்பெயரிலேயே வரும் படத்தில் ஏன் முறையாக பதிவு செய்யவில்லை என்ற கேள்வி நியாயமானது அல்லவா?


படத்தில் ரங்கனை தணிகா சிறுமைபடுத்தும்போது, ”வாத்தியார் எப்பேர்பட்ட ஆளு தெரியுமா. டெர்ரியையே நாக்அவுட் செய்து பரம்பரை மானத்தை காப்பாத்துனாரு” என்று கபிலன் தனது வாத்தியார் ரங்கனின் பெருமையை சொல்லி பொங்கி எழுவார். உண்மை வரலாற்றில் டெர்ரியை வீழத்தியது ராயபுரத்தை சார்ந்த கித்தேரி முத்து எனும் போது அதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? 




மற்றொரு காட்சியில்  வரும் பெயர் பலகையில் ”சார்பட்டா பரம்பரை வாத்தியார் திராவிட வீரன் வியாசார்பாடி ரங்கன்” என எழுதப்பட்டு இருக்கும். திராவிட வீரன் என்ற பட்டத்தை சரியாக குறிப்பிட்டு இருக்கும் போது, இராயபுரம் என்று குறிப்பிடாமல் வியாசர்பாடி என்று குறிப்பிட வேண்டிய காரணம் என்ன? இராயபுரம் என்று சொன்னால் அது மீனவரை குறிக்கும் என்பதாலா? சார்பாட்டா பரம்பரை செயல்பட்ட காலம் முதல் அதில் முக்கிய பங்களிப்பு செலுத்திய மீனவர்களை அடையாளமற்று விலக்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன? படத்தில் வரும் பீடி ராயப்பன் கதாபாத்திரம் கூட சார்பட்டா பரம்பரைக்கு தொடர்பே இல்லாமல் ஏதோ  கடலிலேயே வாழ்பவர் போல காட்டியுள்ளனர். அவரை சார்பட்டா பரம்பரையோடு இணைக்கவில்லை.


நாயகனுக்கு எதிர் போட்டியாளராக இருக்கும் ”இடியப்ப பரம்பரையின்”  உண்மை பெயர் ”இடியப்ப நாயக்கர் பரம்பரை”. மற்றொரு புகழ்பெற்ற பரம்பரை ”எல்லப்பச்செட்டி பரம்பரை”. சினிமா வெகுஜன ஊடகம் என்பதால் எதிர்வரும் பிரச்சனைகளை தவிர்க்க சாதி பெயர்களை தவிர்த்திருக்கிறார் என்று புரிந்துகொள்வோம். மறுபுறம், கதாநாயகன் கபிலனின் சாதிய பின்புலத்தை மட்டும் சரியாக அடையாளப்படுத்த தவறவில்லை. தலித் மக்கள் சார்ந்த கதை சொல்லல் தான் பா.ரஞ்சித்தின் பாணி என்பது தெளிவு. ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக கபிலனின் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற இயக்குநரின்  மெனக்கெடல் ஏற்புடையது. அது அவருடைய இலக்கு. ஆனால், புறந்தள்ளப்பட்ட இனத்தின் சாதனை வரலாற்றை மறைப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும். அதை முறையாக பதிவு செய்வதன் மூலம் இயக்குநர் எதை இழந்துவிடப்போகிறார். 


அரசியல் பிரதிநிதித்துவம், சமூக அரசியல் அணித்திரட்டல், கலை இலக்கிய செயல்பாடுகள், கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் பின்தங்கி இருக்கும் ஒரு மீனவ சமூகத்தின் அடையாளத்தை திரிக்கவோ? புறக்கணிக்கவோ வேண்டிய அவசியம் என்ன?” எனப் பதிவிட்டுள்ளார். இப்பதிவிற்கு ஆதரவாக பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.