2023ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாள்களே உள்ளன. 2024ம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான கலைஞர்களுக்கு வாக்களியுங்கள் என தனியார் இணையதளமான பிங்க் வில்லா ரசிகர்களிடம் வாக்கு சேகரித்தது. அந்த வகையில் 2023ம் ஆண்டில் சிறந்த தென்னிந்திய நடிகைகளில் யார் முதலிடத்தில் உள்ளார் என்ற கருத்துக்கணிப்பு நடைபெற்றது.
நடிப்பு, கதாபாத்திரத் தேர்வு உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் ஆறு திறமையான நடிகைகளின் வரிசையில் அவரவருக்கு பிடித்தமான ஹீரோயினை தேர்வு செய்யுமாறு 1500 ரசிகர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
யார் அந்த நடிகைகள்?
அன்னபூரணி மற்றும் ஜவான் படத்திற்காக நடிகை நயன்தாரா, குஷி மற்றும் சாகுந்தலம் படத்திற்காக சமந்தா ரூத் பிரபு, பொன்னியின் செல்வன் மற்றும் லியோ படத்திற்காக நடிகை த்ரிஷா கிருஷ்ணன், மாமன்னன் மற்றும் தசரா படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ், காதல் தி கோர் படத்திற்காக ஜோதிகா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சித்தா மற்றும் அத்ரிஷ்யா ஜலகங்கள் படங்களுக்காக நிமிஷா சஜயன் உள்ளிட்ட நடிகைகள் அந்த கருத்துக்கணிப்பில் இடம்பெற்றனர்.
முதலிடத்தில் த்ரிஷா :
இந்த வாக்குப்பதிவின் முடிவில் கிட்டத்தட்ட 60% வாக்குகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். இந்த ஆண்டு த்ரிஷாவுக்கு ஒரு அற்புதமான ஆண்டாகவே அமைந்துள்ளது. அவர் நடித்த இரண்டு படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தன.
பொன்னியின் செல்வன் - குந்தவை:
இயக்குநர் மணிரத்தினத்தின் வரலாற்று திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமான தஞ்சை இளவரசி குந்தவை எனும் கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார் த்ரிஷா. அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான நளினம் மற்றும் நேர்த்தியும் அத்தனை அழகாக வெளிப்படுத்தி பார்வையாளர்களின் இதயங்களை ஈர்த்தார்.
தி ரோட் - மீரா :
அதைத் தொடர்ந்து க்ரைம் த்ரில்லர் படமான 'தி ரோட்' படத்தில் தன் கணவர் மற்றும் மகனின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் பெண்ணாக மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
லியோ - சத்யா :
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'லியோ' படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் - த்ரிஷா காம்போவில் உருவான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
த்ரிஷாவை தொடர்ந்து சமந்தாவிற்கு 28%, நயன்தாராவிற்கு 6%, நிமிஷா விஜயனுக்கு 2%, ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் தலா 1% பெற்று இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.