பாடகர் பென்னி தயால் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி மற்றும் மராத்தி போன்ற பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி வருகிறார். தமிழில் ‘டார்லிங்கு டம்பக்கு, உனக்கென்ன வேணும் சொல்லு’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்பாடல்களை பாடியுள்ளார். சூப்பர் சிங்கர் எட்டாவது சீசனில் நடுவராகவும் இருந்தார்




இந்நிலையில் பாடகராவதற்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தேன் என தனது பல்வேறு  அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் பென்னி தயால். தனக்கு சிறுவயதிலிருந்தே ஒரு இசைக்கலைஞராக வேண்டும் எனும் விருப்பம் இருந்தததாகவும் ஆனால் சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் பிபிஓ (BPO)ல் வேலை பார்த்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்தபடியே அவ்வப்போது பாடல்களை பாடி வந்ததாகவும் அந்த சமயத்தில் தான் பாடிய பாடல்கள் பிரபலமான காரணத்தால் அவரது நிறுவனம் தன்னை வேலையை விட்டுப்போக சொன்னதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பது எப்போதும் தன்னுடைய முன்னுரிமையில் இருந்ததில்லை என்றும் அவர்கள் தன்னை வேலையை விட்டுப்போக சொன்னதுதான் தன்னுடைய வாழ்க்கையை தொடர தனக்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.


அதன்பிறகு தன்னுடைய வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ரஹ்மானை நேரில் சென்று காணும் வரையில் திரைத்துறைக்கு தன்னால் வரமுடியவில்லை என்றும் அதன்பிறகு தன்னுடைய வாழ்க்கை தேர்வுகள் குறித்து தெளிவடைய முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார். 


மலையாளத்தில் By the People எனும் படத்திலும் நடித்துள்ளார் பென்னி தயால். ”நடிப்பது பற்றி எனக்கு தெரியாது. அது ஒரு கடினமான துறை. எனக்கு ஏற்ற பாத்திரங்களை இயக்குநர்கள் சொன்னால் நான் கண்டிப்பாக நடிப்பேன். எந்த கேரக்டரை வேண்டுமானாலும் ஏற்று நடிக்க அவ்வளவு பெரிய நடிகன் இல்லை. என்னைப் பொறுத்தவரை  பாடுவதை போல அல்ல நடிப்பது. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். அப்படி நடிக்கவில்லை என்றால் எனக்கு பாடுவதுதான் அதிகமாக பிடித்திருக்கிறது என புரிந்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார். 




பிராந்திய மொழிகளில் பாடும்போது எந்த மொழி எளிமையாக இருந்தது எது கடினமாக இருந்தது என கேட்டபோது, ”தன்னுடைய கரியரை சென்னையிலிருந்து துவங்கியதாகவும், அதனால் தமிழில் பாடுவதுதான் தனக்கு எளிமையாக இருந்ததாகவும் தெரிவித்தார். தான் கேரளாவை சேர்ந்தவனாக இருப்பினும் தமிழில் சரியாக பாட பயிற்சி தேவைப்பட்டதாகவும்” தெரிவித்துள்ளார். தனக்கு பரிச்சயமில்லாத காரணத்தால் வங்காள மொழியில் மொழியில் பல நுணுக்கங்கள் உள்ளதால் அதை பயில்வதற்கு சிறிது காலம் எடுத்ததாகவும், இப்போது அதனை புரிந்துக்கொண்ட காரணத்தால் வங்காள மொழியில் பாடுவது தனக்கு எளிதாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.