சென்செக்ஸ் 60000: அடுத்து என்ன?
கோவிட் தொடர்பான அச்சம் இருக்கும்போது பங்குச்சந்தைகள் படு பாதாளத்தில் இருந்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்செக்ஸ் 25638 என்னும் குறைந்தபட்ச புள்ளியில் வர்த்தகமானது. ஆனால் தற்போது 60000 புள்ளிகளுக்கு மேல் உள்ளது. 18 மாதங்களில் 134 சதவீத வளர்ச்சி என்பது அசாத்தியமானது. ஆனால் இந்த 18 மாதங்களில் சில மியூச்சுவல் பண்ட்கள் அதிகபட்சம் 300 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி அடைந்திருக்கின்றன.
· பாம்பே பங்குச்சந்தை 1875-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவந்தாலும் 1986-ம் ஆண்டு சென்செக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
· 1990-ம் ஆண்டு 1000 புள்ளியை தொட்டது.
· 1999-ம் ஆண்டு 5000 புள்ளியை தொட்டது.
· 2006-ம் ஆண்டு 10000 புள்ளியை தொட்டது
· 2007-ம் ஆண்டு 20000 புள்ளியை தொட்டது
· 2014-ம் ஆண்டு 25000 புள்ளியை தொட்டது
· 2015-ம் ஆண்டு 30000 புள்ளியை தொட்டது
· 2018-ம் ஆண்டு 35000 புள்ளியை தொட்டது
· 2019-ம் ஆண்டு 40000 புள்ளியை தொட்டது
· 2020-ம் ஆண்டு 45000 புள்ளியை தொட்டது
· 2021-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி 50000 புள்ளியை கடந்தது
· 2021-ம் ஆண்டு செப்டமர் 24-ம் தேதி 60000 புள்ளியை தொட்டது
என்ன காரணம்?
எட்டே மாதங்களில் 10000 புள்ளிகளுக்கு மேலே சென்செக்ஸ் உயர்ந்திருக்கிறது. தற்போது பிஎஸ்இயில் உள்ள பங்குகளின் சந்தை மதிப்பு 261 லட்சம் கோடி ரூபாய் எனும் உச்சத்தில் இருக்கிறது. பங்குச்சந்தையின் இந்த ஏற்றத்துக்கு பல காரணங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பங்குச்சந்தை பெரும்பாலும் அந்நிய முதலீட்டாளர்களை நம்பியே இருந்தது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறும்போது சந்தை சரியும் என்னும் சூழல் இருந்தது. ஆனால் தற்போது வெளிநாட்டு முதலீடுகள் கணிசமான பங்கினை வகித்தாலும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கோவிட்டுக்கு பிறகு 3 மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கிறது. தவிர இந்திய நிறுவனங்களும் பெரும் தொகையை முதலீடு செய்துவருகின்றன.
அதேபோல வெளிநாட்டு முதலீடும் இந்தியாவுக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. சர்வதேச அளவில் முதலீட்டுக்கு சரியான வாய்ப்புகள் உள்ள நாடுகள் மிகவும் குறைவு என்பதால் இந்தியாவுக்கு முதலீடுகள் குவிகின்றன. அந்நிய முதலீடு நிறுவனங்கள் கடந்த 18 மாதங்களில் 40 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்திருக்கின்றன. சர்வதேச அளவில் வட்டி விகிதம் என்பது மிகவும் குறைவாக இருப்பதால் அந்த தொகை இந்திய பங்குச்சந்தைக்கு வருகிறது.
அடுத்து என்ன?
சென்செக்ஸ் 60000 என்பது ஒரு பயணத்தின் முடிவல்ல. சென்செக்ஸ் பயணத்தின் தொடக்கம் என பிஎஸ்இயின் தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் சவுகான் தெரிவித்திருகிறார். புதிய டெக்னாலஜி புரோக்கிங் நிறுவனங்கள் வந்திருப்பதால், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தொடர்ந்து உயர்வார்கள் என தெரிவித்திருக்கிறார்.
நீண்ட காலத்தில் பங்குச்சந்தை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றே பல சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு பங்குச்சந்தை வல்லுநர் ஏ.கே.பிரபாகர் பொதுநிகழ்ச்சி ஒன்றில் பங்குச்சந்தையின் எதிர்காலம் குறித்து பேசினார்.
தற்போது இந்திய ஜிடிபியின் மதிப்பு 2.8 ட்ரில்லியன் டாலர் என்னும் அளவில் இருக்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 2025-ம் என்பது சாத்தியமில்லாத இலக்கு. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் 2026 அல்லது 2027-ம் ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்.
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இதே காலகட்டத்தில் வேகமான வளர்ச்சியை அடைந்தன. அதே சூழல் இந்தியாவுக்கு இருக்கிறது என்பதால் இன்னும் 5 ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது சாத்தியம். அப்போது பங்குச்சந்தை தற்போதைய நிலையை விட இரு மடங்காக இருக்கும் என தெரிவித்தார்.
அதற்கான சரிவே வராது என்பது உத்தரவாதமில்லை. சர்வதேச மற்றும் உள்ளூரில் நடக்கும் மாற்றங்களால் ஏற்ற இறக்கம் இருக்கும். சென்செக்ஸ் 10000 புள்ளிகள் கூட சரிவை சந்திக்கலாம். ஆனால் ஒரு பெரிய சரிவுக்கான அல்லது வீழ்ச்சிக்கான சூழல் இருப்பதாக தெரியவில்லை என தெரிவித்தார்.
மேலும் முதலீட்டாளர்களின் வரவு, புதிய நிறுவனங்களின் ஐபிஓ என பல சாதக சூழல் நிலவுகிறது. அதனால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையின் மீது கவனத்தை வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வது என்பது கொஞ்சம் ரிஸ்கானதுதான். எந்த பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு தொகையை முதலீடு செய்யலாம் என்பது தொடர்ச்சியாக கவனிக்க வேண்டிய விஷயம். அதனால் குறைந்தபட்சம் மியூச்சுவல் பண்ட்கள் மூலமாகவாவது பங்குச்சந்தையில் முதலீடு செய்வது நல்லது. அப்போதுதான் இந்திய வளர்ச்சியில் பங்கேற்க முடியும் என பல நிதி ஆலோசகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
வங்கிகளின் வட்டி விகிதம் 7 சதவீதத்துக்கு கீழ் என்று இருக்கும் நிலையில் பங்குச்சந்தை சார்ந்த முதலீட்டை முதலீட்டாளர்கள் பரிசீலனை செய்வது நல்லது.