விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார் பாடகர் பென்னி தயால். தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் எட்டாவது சீசனில் நடுவராக இருந்தவர் பாடகர் பென்னி தயால்.


தமிழ்நாட்டின் புதிய பாடகர்களுக்கான தேடலாக அறியப்படுவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது எட்டாவது சீசனை எட்டியுள்ளது. கடந்த சில சீசன்களைப் போலவே, இந்த சீசனிலும் பாடகர்கள் பென்னி தயால், எஸ்.பி.பி.சரண், அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்று வருகின்றனர்.



பென்னி தயால்


 


இந்நிலையில் இன்று பென்னி தயால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் இனியும் தனக்கு வெறுப்புடன் அனுப்பப்படும் மெசேஜ்களைச் சகித்துக் கொள்ளப் போவதில்லை என்றும், அடுத்த சீசனில் இருந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற போவதில்லை என்றும் கூறியுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருப்பதால் பென்னி தயாலுக்கு இப்படியான மெசேஜ்கள் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.


தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பென்னி தயால், ‘சூப்பர் சிங்கர் எட்டாவது சீசன் தொடர்பாக இனி எந்தவொரு பதிவையும் நான் வெளியிடப் போவதில்லை. எனக்கு அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி. இத்தனை வளர்ச்சிக்குப் பிறகு, நானும் சாதாரண மனிதன் தான். இதோடு முடித்துக் கொள்கிறேன். நன்றி. அடுத்த சீசனில் உங்களைச் சந்திக்க மாட்டேன்’ என்று பதிவிட்டுள்ளார். இதற்கான காரணத்தை அவர் பகிரங்கமாகப் பகிரவில்லை எனினும், சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்த எலிமினேஷன் இதற்கான காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. 



ஸ்ரீதர் சேனா


 


ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பலராலும் ரசிக்கப்பட்டவர். பல்வேறு விதமான ரவுண்ட்களில் மிகச்சிறந்த பாடகராகவும் வலம் வந்து, பாராட்டுகளைப் பெற்றவர் ஸ்ரீதர் சேனா. இருப்பினும், கடந்த வார நிகழ்ச்சியில் ஸ்ரீதர் சேனா எலிமினேட் செய்யப்பட்டார். ஸ்ரீதரை விட திறமை குறைந்த பாடகர்கள் இன்னும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருப்பதாகவும், இந்த எலிமினேஷன் தவறானது எனவும் பல ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் குறிப்பிட்டிருக்கின்றனர். ஸ்ரீதரின் எலிமினேஷனை அறிவித்ததற்காக, சூப்பர் சிங்கர் ரசிகர்கள் பலரும் பென்னி தயாலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர். 


நேர்மறையான கமெண்ட்களும் பென்னி தயாலின் போஸ்டில் வைக்கப்பட்டிருந்தாலும், சில கமெண்ட்களுக்கு அவரும் பதில் தந்திருந்தார். எனினும், கடுமையான சொற்களால் வெறுப்பு நிறைந்த கமெண்ட்கள் அதிகளவில் பென்னி தயால் மீது பாய்ந்ததால், அவர் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.