தன்னை அவதூறாகப் பேசியதாக பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணிக்கு எதிராக வாடகை கார் டிரைவர் ஒருவர் புகாரளித்துள்ளார். கர்நாடகாவில் வாடகை கார் புக் செய்து அதில் பயணித்த நடிகை சஞ்சனா கல்ராணி தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அது தொடர்பான வீடியோவும் வைரலானது.


இந்நிலையில்தான் வாடகை கார் டிரைவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் தன்னுடைய புகார் மனுவில், தொம்மலூர் பகுதியில் சஞ்சனா கேபில் ஏறியதாக குறிப்பிட்டுள்ளார். ஏறியதும் ஏசியை போடுமாறு ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். ஆனால் அரசின் கொரோனா  விதிமுறைகளின்படி, கேபில் ஏசி போடதான் மறுப்பு தெரிவித்ததாக தெரிவித்துள்ளார். ஆனாலும் ஏசியைப் போட்டு லெவல் 1ல் வைக்க வேண்டும் என சஞ்சனா கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.



இதனையடுத்து தன்னுடைய பக்க கதையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், "ஆரம்பத்தில், டிரைவர் ஏசியை இயக்க மாட்டேன் என்று சொன்னார், அவர் முரட்டுத்தனமாகவும் கடுமையாகவும் இருந்தார். பின்னர் அவர் எங்களை நோக்கிக் கத்தினார். அவர்  ‘கோவிட் விதிமுறைகள்’ என்ற வார்த்தையையே எங்கும் பயன்படுத்தவில்லை. கேப் புக் செய்யும்போதும் அதைப்பற்றி குறிப்பிடவில்லை. நான் ஒரு ஏசி காருக்குத் தான் கட்டணம் செலுத்துகிறேன். எனில், ஏசியை ஆன் செய்யுமாறு கேட்பது வாடிக்கையாளரின் உரிமை என தெரிவித்துள்ளார்.






மேலும், “நான் அவரிடம் ஒரு வார்த்தைக் கூட தவறாகப் பேசவில்லை. நீங்கள் உங்கள் தாயிடமும், சகோதரிகளிடமும் இப்படித்தான் நடந்துக் கொள்வீர்களா என்றுதான் கேட்டேன். இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் எங்களைத் தவறானப் பாதையில் அழைத்துச் சென்று சரியான இடத்தில் இறக்கிவிடாமல் சாலையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். அவர் மிகவும் திமிறாகப் பேசியதால்தான் நான் வலுவாகப் பேசினேன். காலை 10.30 மணிக்கு காவல்துறையை அழைத்து கேப் டிரைவர் காரை நிறுத்தாமல் செல்கிறார், காரின் மீட்டரை வேண்டுமென்றே அதிகரிக்கிறார் என சொன்னேன். அதன்பின் தான் அவர் காரையே நிறுத்தினார். உழைக்கும் வர்க்க மக்களின் வலியை நான் மதிக்கிறேன். எல்லாம் போதும். எனக்கு எதிரான பொய்க் கதைகளை இனி எடுத்துக்கொள்ள முடியாது என பதிவிட்டுள்ளார்.



இந்நிலையில் ராஜராஜேஸ்வரிநகர் போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.