பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மா(30). இவர் இதற்கு முன் இரண்டு முறை புற்றுநோய் ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர். மேலும் புற்று நோய்க்காக பல கீமோதெரபி சிகிச்சைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், அவர் பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அப்போது வெளிவந்த தகவல்களின்படி, அவரது மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாக கூறப்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு தற்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 






நேற்றைய தினம் நடிகை ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, தற்போது அவர் வென்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






சில நாட்களுக்கு முன் நடிகை ஐந்த்ரிலா சர்மாவின் காதலர் மற்றும் நடிகர் சௌத்ரி தனது சமூக வலைதள பக்கத்தில் ஐந்த்ரிலா குறித்த நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "அதிசயம் நடைபெற வேண்டிக் கொள்ளுங்கள். நான் இதைப் பற்றி இங்கு பேசுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அனைவரும் ஐந்த்ரிலாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். அதிசயம் நிகழ வேண்டிக் கொள்ளுங்கள். அவர் பல சவால்களை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.