Behind The Song வரிசையில் இன்று நாம் ரட்சகன் படத்தில் இடம்பெற்ற “சந்திரனை தொட்டது யார்?” பாடல் உருவான விதம் பற்றி காணலாம்.
1997 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் மிக பிரமாண்டமாக தயாரித்த படம் “ரட்சகன்”. பிரவீன் காந்தி இயக்கிய இப்படத்தில் நாகார்ஜூன், சுஷ்மிதா சென், ரகுவரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கிரிஷ் கர்நாட், வடிவேலு என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தில் வைரமுத்து 6 பாடல்களையும், வாலி 2 பாடல்களையும் எழுதினர். இதில் சந்திரனை தொட்டது யார் பாடல் உருவான விதம் பற்றி காணலாம்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, “ரட்சகன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். அந்த படத்தில் நான் பாடல் எழுதினேன். அப்போது எனக்கும் அவருக்கும் சண்டை வந்தது. சொத்து தகராறு எல்லாம் இல்லை. மொழியை காப்பாற்ற நானும், இசையை காப்பாற்ற அவரும் மோதிக்கொண்டோம்.
சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா என்ற வரியை நல்லாருக்கு என சொன்ன ரஹ்மான், ஆனால் பாட முடியாது என தெரிவிக்கிறார். நான் ஏன் என கேட்டதும் இசை மென்மையாக இருக்க வேண்டும் என ரஹ்மான் சொல்கிறார். நானும் அதை ஒப்புக்கொண்டு அதில் சாதாரண வார்த்தைகளை போட்டு எழுத முடியும். மானே, தேனே, தென்றல் போன்ற வார்த்தைகள் எல்லாம் செத்து போய் விட்டது.
பாடலாசிரியர்கள் அந்த சொற்களை எல்லாம் எழுதி எழுதி தேய்த்து விட்டார்கள். இதனால் ஆகாத சொற்கள், கேளாத வார்த்தை போன்றவற்றை கொண்டு வர முடியுமா என நான் முயன்றேன். சந்தினை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா என்ற வரியை கடினமாக இருக்கிறது என சொல்லி விட்டார். பாட்டை கேட்டு முதல் வரியே தூக்கி போட்டால் எல்லாம் வேஸ்ட் ஆகி விடும்.
அதனால் முதல் வரி என்பது ரொம்ப முக்கியம். ஏ.ஆர்.ரஹ்மான் கேட்கவே இல்லை. நான் அவரிடம், ஹரிஹரன் வரட்டும் பேசிக்கொள்ளலாம். நான் வரியை சொல்கிறேன், நீங்கள் இசையை சொல்லுங்கள், ஹரிஹரன் பாட முடியவில்லை என்றால் மாற்றி தருகிறேன் என சொல்லி விட்டேன்.வந்ததும் அவரிடம் வரிகளை சொன்னதும் “நைஸ்” சார் என ஹரிஹரன் கூறியதும் நான் ரஹ்மானை ஏறிட்டு பார்த்தேன். அவரிடம், இசை வல்லினத்தை மெல்லினமாக்குகிறது, கல்லை கனி செய்கிறது என சொன்னேன்” என தெரிவித்திருப்பார்.