மாளவிகாவிடம் அழகே அவரது முகத்தில் இருக்கும் அந்த சிரிப்புதான் என இயக்குநர் சுந்தர்.சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


1999 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம் “உன்னைத் தேடி”. இப்படத்தில் அஜித்குமார், மாளவிகா, விவேக், கரண், சுவாதி, சிவகுமார், மனோரமா, ஸ்ரீவித்யா என பலரும் நடித்திருந்தனர். தேவா இப்படத்துக்கு இசையமைத்தார். இப்படம் தான் மாளவிகாவின் முதல் தமிழ் படமாகும். இந்த படத்தில் இடம் பெற்ற நீதானா நீதானா பாடல் உருவான விதத்தை இயக்குநர் சுந்தர் சி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். 


அதில், “உன்னைத்தேடி படத்தில் நடிக்க வைக்கும்போது, ஒரு பெண்ணுக்கான எந்த குணங்களும் இலக்கணம் இல்லை என்பதை நான் மாளவிகாவிடம் தான் தெரிந்து கொண்டேன். நடக்கக்கூட வராது. மாளவிகாவிடம் அழகே அவரது முகத்தில் இருக்கும் அந்த சிரிப்பு மட்டும் தான். உன்னைத்தேடி படத்தில் நடிக்கும்போது மொழி பிரச்சினையும் அவருக்கு இருந்தது. 


அந்த படத்தின் முதல் ஷெட்யூலின் மாளவிகாவுக்கு 1,2, 3 என்ற முறையில் தான் நடிப்பு சொல்லிக் கொடுத்தோம். 1 என்றால் பார்க்கணும், 2 என்றால் தலை குனியணும், 3 என்றால் சிரிக்கணும் என்று சொல்லிக்கொடுத்து தான் நடிக்க வைத்தோம். அந்த படத்தில் மாளவிகாவுக்கு டான்ஸ் என்றால் என்ன என கேட்கும் அளவுக்கு சுத்தமாக வராது. ஆனால் பின்னாளில் அவர் மிகப்பெரிய டான்ஸராக மாறிவிட்டார். 



மாளவிகா ஆடினால் நான் சிரிக்கும் அளவுக்கு இருந்தது. உன்னைத்தேடி படத்தில் “நீதானா நீதானா” என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. நியூசிலாந்தில் அஜித்தை வைத்து படமாக்கினோம். அப்போது அவருக்கு பயங்கரமான முதுகு வலி இருந்தது. எனக்கு தொண்டை வலி இருந்தது. இதற்கு நடுவில் மாளவிகாவின் டான்ஸ் பிரச்னை இருக்கிறது. நான் எப்படியாவது பாடலை படமாக்க வேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறேன். டான்ஸ் மாஸ்டர் சோர்ந்து விட்டார். 


இதனையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அஜித், நான் சரி செய்கிறேன் என சொன்னார். அவர் கையை ஆட்டி வா வா என அழைத்தால் வரணும். நிற்குமாறு சிக்னல் கொடுத்தால் நிற்க வேண்டுமென சொல்லவும் மாளவிகா சரியாக செய்தார்.  பின்னாடி பார்த்தால் மாளவிகா வாளமீனுக்கு விலங்கு மீனுக்கும் பாடலில் பட்டையை கிளப்பியிருப்பார். 


பின்னர் நான் நடித்த ஆயுதம் செய்வோம் படத்தில் மாளவிகா ஒரு சின்ன கேரக்டரில் வருவார். அவருக்கு பூக்கள் தூவி வரவேற்பதுபோல காட்சி இருக்கும். அப்போது உன்னை அறிமுகம் செய்த பாவத்துக்கு என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு பாரு என வேடிக்கையாக நினைத்து கொண்டேன். ரொம்ப வெகுளியான பெண்தான் மாளவிகா. ஸ்வேதாவை மாளவிகாவாக நான் மாற்றினேன். அது அவருக்கு பொருந்தி போனதால் சினிமாவில் அதே பெயருடன் பயணித்தார்” என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.