நடிகர் பாவா லட்சுமணனுக்கு விஜய் டிவி பிரபலங்களான கேபிஒய் பாலா, தாடி பாலாஜி ஆகியோர் உதவியுள்ளனர்.


கால் கட்டை விரல் அகற்றம்


பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனுக்கு நீரிழிவு நோயால் கால் கட்டைவிரல் அகற்றப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார்.


மாயி படத்தில் வடிவேலுவுடன் இவர் செய்த ‘வாம்மா... மின்னல்’ காமெடியைப் பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அதே போல் வாள மீன், விலாங்கு மீன் வரிசையில் ஜாமீன் கிடைக்கவில்லை என பாவா லட்சுமணன்  செய்த காமெடி இன்றும் நம்மை சேனல்களில் ஒளிபரப்பாகும்போது வயிறு குலுங்கு சிரிக்க வைக்கும்.


வடிவேலுவுடன் தொடர்ந்து பல காமெடிகளில் வலம் வந்துள்ள பாவா லட்சுமணன், இன்றைய இணைய உலகில் மீம் க்ரியேட்டர்ஸின் கண்டெண்ட்டாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது பாவா லட்சுமணன், நீரிழிவு நோயினாலும் பொருளாதார நெருக்கடியினாலும் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறார். 


நேரில் விசாரித்த கேபிஒய் பாலா, பாலாஜி


சில ஆண்டுகளாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டும், அதனை முறையாகக் கட்டுப்படுத்த தவறியதால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பாவா லட்சுமணன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், காயம் அதிமாகி விட்டதனால் அவரது காலில் இருக்கும் கட்டை விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.


இச்சூழலில், “சிகிச்சையில் இருக்கும் லட்சுமணனை நடிகர் தாடி பாலாஜி முன்னதாக மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்ததுடன், அவருக்கு நிதி உதவியும் அளித்துள்ளார். மேலும், எங்கள் கலைத்துறையின் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் அண்ணண் பாவா லட்சுமணன் அவர்களுடைய உடல் நிலை பாதிப்பைக் குறித்து எனக்கு தெரிந்ததும் மிகவும் வருந்தினேன். தற்ப்போது நேரில் சென்று அண்ணனை பார்த்து உடல் நலம் பற்றி மருத்துவர்கள் கூறிய ஆலோசனைகளையும் கேட்டறிந்து, எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை தொடர்பு கொள்ளும்படி கூறி இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


சிரிக்க வைத்த பாலா


இதேபோல் முன்னதாக குக்கு வித் கோமாளி நடிகர் கேபிஒய் பாலா நடிகர் பாவா லட்சுமணனை சந்தித்து அவருக்கு நிதி உதவி செய்துள்ளார். மேலும், மருத்துவமனையில் ‘வாம்மா மின்னல்’ காமெடியை நடித்து பேசிக் காண்பித்து பாவா லட்சுமணனை சிரிக்கவைக்கும் வீடியோவும் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


 






முன்னதாக தான் நண்பர்களின் உதவியால் தால் காலம் தள்ளி கொண்டிருப்பதாகவும் ஆறு மாதங்களாக பட வாய்ப்பு இல்லை என்றும் பாவா லட்சுமணன் தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்திருந்தார். 


மேலும், தன்னைப் போன்ற துணை நடிகர்கள் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் தான் வாங்குவதாகவும், கால் சரியானபின் தான் வேலை தேட முடியும் என்றும், தன்னைப் போன்ற நலிவடைந்த கலைஞர்களுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் உதவ வேண்டும் என்றும் கோரி இருந்தார்.