மார்கட் ராபி நடிப்பில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான ”பார்பி” சர்வதேச அளவில் வசூலில் புதிய சாதனை படைக்க உள்ளது.


பார்பி:


குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமான பார்பி பொம்மையை மையாமாக கொண்டு உருவான, லைவ்-ஆக்‌ஷன் திரைப்படம் பார்பி. கடந்த மாதம் வெளியான இப்படத்தில் மார்கட் ராபி, ரியான் காஸ்லிங் மற்றும் சைமு லியு ஆகியோர் நடித்து இருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் படத்துடன் பார்பி திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது.


ஆனால், ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் 18+ கண்டெண்டாக இருந்தததும், குழந்தைகள் மத்தியில் மிகவும் பரிட்சியமாக பார்பி இருந்ததும் பார்பி படத்திற்கு சாதகமாக இருந்தது. இதனால், சர்வதேச அளவில் அப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்நிலையில் தான் அப்படம் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளது.


உள்ளூர் வசூலில் அட்டகாசம்:


வார்னர் ப்ரோஸ் நிறுவனம் விநியோகித்த இப்படம் உலக அளவில் தற்போது, 1.34 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்துள்ளது.  அதில் உள்ளூரில் மட்டும் 594 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் , சர்வதேச சந்தையில் 745 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் அப்படம் வசூலித்துள்ளது.


சாதனை படைக்கும் பார்பி:


இதன் மூலம் வார்னர்ஸ் ப்ரோஸ் நிறுவனத்தால் சர்வதேச அளவில் விநியோகிக்கப்பட்டு, உள்ளூரில் அதிக வசூல் ஈட்டப்பட்ட படம் என்ற பெருமையை பார்பி திரைப்படம் பெற்றுள்ளது. முன்னதாக, டார்க் நைட் திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் 533 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து இருந்தது.


அந்த சாதனையை பார்பி திரைப்படம் கடந்த வாரமே முறியடித்துவிட்டது. அதோடு, வார்னஸ் ப்ரோஸ் நிறுவனம் விநியோகித்த ஹாரி பார்ட்டர் டெத்லி ஹாலோஸ் படத்தின் இரண்டாம் பாகத்தின் மொத்த வசூலை விட வெறும் 1 மில்லியன் டாலர் அளவிற்கு மட்டுமே இப்படம் பின்தங்கியுள்ளது. இதன் மூலம் விரைவில், அந்த படம் வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தின் அதிகம் வசூல் செய்த படங்களில் விரைவில் 8வது இடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


சூப்பர் மாரியோ காலி:


இதனிடையே, வீடியோ கேமை அடிப்படையாக கொண்டு அண்மையில் வெளியான மாரியோ கேம், உலக அளவில் பெரும் வரவேற்பு பெற்று 1.35 பில்லிய அமெரிக்க டாலர்களை வசூலித்தது. உள்ளூரில் மட்டுமே 574 அமெரிக்க டாலர்களையும் வசூலித்து முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையையும் பார்பி திரைப்படம் தகர்த்துள்ளது.


அடுத்தடுத்த தினங்களில் இப்படம் மேலும் சில மில்லியன்களை வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால்,  விரைவில் மாரியோ படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் பார்பி மிஞ்சும் என படக்குழு தெரிவித்துள்ளது. அதேநேரம், பார்பி படத்துடன் வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தின் வசூல் 770 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்துள்ளது.