மொத்தம் 4 பில்லியன் வசூல் செய்து கொரோனா நோய் தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீண்டும் திரையரங்கங்களின் லாபத்தை பெருக்கியுள்ளன பார்பீ மற்றும் ஓப்பன்ஹெய்மர் திரைப்படங்கள்..


சரிந்து கிடந்த ஹாலிவுட்


கடந்த 2019-ஆம் ஆண்டு கொரோனா நோய்தொற்று சினிமா மீது ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சநஞ்சம் இல்லை. மக்கள் பெருந்திரளாக திரையரங்குகளில் வந்து படம் பார்க்கும் காலம் முடிந்துவிட்டது என்றுகூட கருத்துகள் பரவத்தொடங்கியிருந்தன. அதே நேரத்தில் ஓடிடி தளங்களின் அசுர வளரச்சியின் காலமும் இந்த காலம்தான். கடந்த 2019-ஆம் கொரோனா தொற்றுக்கு முந்தைய சமயத்தில் மட்டுமே ஹாலிவுட் சினிமா 4.34 பில்லியன் வசூலை திரைப்படங்களின் வழியாக அடைந்தது.


கொரோனாவின் வருகைக்குப் பின் இந்த எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு குறைந்தது. இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான தி ஃபிளாஷ் மற்றும் இண்டியானா ஜோன்ஸ் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் இந்த ஆண்டும் அதே நிலைதான் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் வெளியான இரண்டு படங்கள் ஹாலிவுட் சினிமாவை மீண்டும் சிகரம் தொட வைத்துள்ளன.

பார்பென்ஹெய்மர்


கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஓப்பென்ஹெய்மர் மற்றும் கிரெட்டா கெர்விக் இயக்கிய பார்பீதான் இந்த இரண்டு படங்கள். அணு ஆயுதத்தை கண்டுபிடித்த விஞ்ஞானியான ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஓப்பன்ஹெய்மர். அதே நேரத்தில் பொம்மைகளின் அழகியான பார்பீ கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்ட ஃபேண்டஸி திரைப்படம் பார்பீ.


இரண்டு படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்து அந்த எதிர்பார்புகளை பூர்த்தியும் செய்தன.


மீண்டும் சிகரம்தொட்ட ஹாலிவுட்


கடந்த ஜூலை 21 ஆம் தேதி வெளியான இந்த இரண்டு படங்கள் இதுவரை உலகளவில் மொத்தம் 3.797 பில்லியன் வசூல் செய்துள்ளன. இரண்டு படங்கள் வெளியாவதற்கு முன்பாக அடுத்தடுத்து வெளிவந்த படங்களின் தோல்வியால் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் 7 சதவீதம் குறைந்திருந்தன. இந்த நிலை பார்பீ மற்றும் ஓப்பன்ஹெய்மர் ஆகிய இரு படங்களின் வருகைக்குப் பின் மாறியது. திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் 16.6 சதவீதம் அதிகரித்துள்ளது.


ஒருபக்கம் பார்பீ திரைப்படம் ஹாலிவுட்டில் பெண் இயக்குநர்களால் இயக்கப்பட்ட படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து உச்சத்தில் போய் நின்றது என்றால் மறுபக்கம் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஐ மேக்ஸ் திரையரங்குகளில் அதிகம் வசூல் ஈட்டிய படங்களின் வரிசையில் சாதனை படைத்துள்ளது. இந்த இரு படங்களும் இன்னும் இரண்டு வாரங்கள் திரையரங்குகளில் தொடர இருக்கும் பட்சத்தில் 4 பில்லியன் வசூல் சாதனையை இவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருந்தொற்று காலத்தில் சரிந்த ஹாலிவுட் சினிமா இன்று நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கொடிகட்டி பறக்கத் தொடங்கியிருக்கிறது.