பங்களாதேஷின் முன்னணி மல்டிபிளக்ஸ் ஒன்றின் ஒரு அங்கமான ஸ்டார் சினிப்ளெக்ஸில் முதியவர் லுங்கி அணிந்திருந்ததால் டிக்கெட் மறுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவை அந்த அடுத்து, மல்டிபிளக்ஸ் தற்போது ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. புதன்கிழமை அன்று வெளியான இந்த வீடியோ, சிறிது நேரத்தில் வைரலானது. அந்த வீடியோவில் இருந்தவர் சமன் அலி சர்க்கார் என அடையாளம் காணப்பட்டது. டாக்காவின் சோனி ஸ்கொயர் கிளையில் உள்ள ஸ்டார் சினிப்ளெக்ஸ் தியேட்டருக்கு "போரன்" என்கிற படத்தைப் பார்க்கச் சென்றதாகவும், ஆனால் டிக்கெட் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து சினிப்ளெக்ஸ் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வாடிக்கையாளர்களிடம் எதன் அடிப்படையிலும் பாகுபாடு காட்டுவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.



"ஸ்டார் சினிப்ளெக்ஸ் ஒரு நபரின் உடையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டாது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். லுங்கி அணிந்திருப்பதால், ஒருவருக்கு டிக்கெட் வாங்குவதற்கான உரிமையை மறுக்கும் கொள்கைகள் எங்கள் நிறுவனத்தில் இல்லை. எங்கள் திரையரங்குகளில் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களை பார்த்து ரசிக்க அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள் என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்" என்று ஸ்டார் சினிப்ளெக்ஸ் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.



"சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமான தவறான புரிதலின் விளைவாக இருக்கலாம். இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறுவதைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம், மேலும் அதை எங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்த சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நன்றி," என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது.


திரையரங்கம் பின்னர் சர்கார் மற்றும் அவரது குடும்பத்தினரை அதே மல்டிப்ளெக்ஸில் படம் பார்க்க அழைத்தது. மேலும் இதுகுறித்த புகைப்படங்களை அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "போரன்" படத்தின் நட்சத்திரங்களில் ஒருவரான சரிஃபுல் ராஸும் சர்கார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தியேட்டருக்குச் சென்று அவர்களுடன் படத்தைப் பார்த்துள்ளார்.