விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு ஒரு பரிச்சயமான முகமானார் பாலாஜி முருகதாஸ். மாடலிங் செய்து வந்தவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது ஒவ்வொரும் நாளும் கலவரம் தான். கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அதைத் தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் செலிபிரிட்டியாக மாற, திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு வந்தன. அப்படி அவருக்கு வந்த வாய்ப்புகளில் ஒன்றுதான் ஜே.எஸ்.கே தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சதீஷ் குமார் தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் 'ஃபயர்' திரைப்படம். பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சிங்கம் புலி, சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். சதீஷ் ஜி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள டி.கே இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சியில் பாலாஜி முருகதாஸ் ஒரு ப்ளே பாயாக வலம் வருவது போல் காட்சியமைக்கப்பட்டு வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்றது.
பெண் குழந்தைகளை செல்லமாக வளர்க்கும் பெற்றோர் அவர்களை பாதுகாப்பாக வளர்கிறார்களா என்ற கேள்விக்குறியை மைப்படுத்தி தமிழ்நாட்டில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது என நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட 'ஃபயர்' படத்தின் இயக்குநர் சதிஷ் குமார் தெரிவித்து இருந்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில் அடுத்தக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் “நான் சினிமாவில் இருந்து விலகுகிறேன். இந்த படத்தில் நடித்ததற்காக இதுவரையில் சிங்கிள் பேமெண்ட் கூட வாங்கவில்லை” என, கெட்ட வார்த்தையில் திட்டி அதிரடியாக போஸ்ட் பகிர்ந்து இருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் “இப்படி ஒரு முடிவை அவசரப்பட்டு எடுக்காதீர்கள். வலிமையாகவும் உறுதியாக இருங்கள்” என ஊக்கமளிக்கும் வகையில் கமெண்ட் மூலம் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.