நடிகர் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் படம் குறித்து இணையவாசி சொன்ன கருத்துக்கு அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி சொன்ன பதில் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. 


பகாசூரன்


பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத்தவிர  ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோரும் பகாசூரனில் இணைந்துள்ளனர். 


இப்படத்திற்கு  சாம் சி.எஸ். இசையமைத்துள்ள நிலையில், மோகன் ஜியின் முந்தைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பகாசூரன் படம் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாரான நிலையில், படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியானது. 






பரபரப்பை ஏற்படுத்திய ட்ரெய்லர்


சர்ச்சையான வசனங்கள் அடங்கிய இந்த ட்ரெய்லர் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பேட்டி ஒன்றில் படத்தின் இயக்குநர் மோகன் ஜி, தமிழ்நாடு முழுக்க உள்ள மசாஜ், ஸ்பா போன்றவற்றில்  வேலை செய்யும் பெண்கள், அந்த தொழிலுக்குள் எப்படி வருகிறார்கள்? என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் நிறைய உண்மை சம்பவங்கள் இருக்கிறது என தெரிவித்து இருந்தார். இதனால் பகாசூரன் படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 






பிப்ரவரி 17ல் ரிலீஸ் 


இதற்கிடையில் பகாசூரன் படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இணையவாசி ஒருவர், பகாசுரன் வெற்றிகரமாக பிளாப் ஆகி தோல்வி அடைந்து ஊத்திக்க வாழ்த்துக்கள்... ஊஊஊஊஊ... என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மோகன் ஜி, நீ உன் குல தெய்வத்தை வேண்டி ஒரு பக்க காதை அறுத்துக்கிட்டாலும் அது நடக்காது.. படம் எல்லாருக்கும் பிடிக்கும்.. வெற்றி படமாக அமையும்.. Screenshot எடுத்து வச்சிக்கோ... என பதிலடி கொடுத்துள்ளார்.