செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் படத்தின் வெளியீட்டு தேதி ஏன் பிப்ரவரி 17 ஆம் தேதி என முடிவு செய்யப்பட்டது என்று இயக்குநர் மோகன் ஜி நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்துள்ளார். 


பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத்தவிர  ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோரும் பகாசூரனில் இணைந்துள்ளனர். 


இப்படத்திற்கு  சாம் சி.எஸ். இசையமைத்துள்ள நிலையில், மோகன் ஜியின் முந்தைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பகாசூரன் படம் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாரான நிலையில், படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியானது. 


இதற்கிடையில் பகாசூரன் படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தேதியில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் வெளியாகவுள்ளது. அண்ணன் செல்வராகவன் - தம்பி தனுஷ் படங்கள் ஒரே நாளில் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இணையத்தில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ஏன் பிப்ரவரி 17 ஆம் தேதி  தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. 


அதற்கு, “என் மனநிலைமையை கொஞ்சம் யோசிச்சி பாருங்க. நவம்பர் படத்தை ரிலீஸ் செய்ய பிளான் பண்ணேன். டிசம்பர் 2 பிளான் பண்ணோம். டிசம்பர் 16 ஆம் தேதி அவதாருடன் ரிலீஸ் செய்ய பிளான் பண்ணோம். அப்புறம் டிசம்பர் 23 லத்தி படத்துடன் ரிலீஸ் முடிவை எடுத்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஜனவரி விஜய், அஜித் படங்கள் வந்துவிட்டது.  


பிப்ரவரியை எடுத்தால் பிப்ரவரி 3, 10, 24 இந்த 3 தேதிகள் தான் இருந்தது. பிப்ரவரி 17 ஆம் தேதி வாத்தி படம் வருவதால் அதை நாங்கள் கணக்கில் எடுக்கவேயில்லை. ஆனால் பைனான்சியல் பிரச்சினை காரணமாக 17 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது. தனுஷ் படத்திற்கு எதிராக செல்வராகவன் படம் வந்தால் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும் என அந்த தேதி முடிவு செய்யப்பட்டது” என மோகன் ஜி தெரிவித்துள்ளார்.