நான் ஏதோ ஒரு சமூகத்தை எதிர்த்து படம் பண்ண வேண்டும் என்று நினைத்து சினிமாவிற்கு வரவில்லை என இயக்குநர் மோகன் ஜி கூறியுள்ளார். 


பகாசூரன்:


பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகாசூரனில்  நடிகர்கள் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடிக்க,  ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோரும் பகாசூரனில் இணைந்துள்ளனர். சாம் சி.எஸ்.  இப்படத்திற்கு  இசையமைத்துள்ளார். 


ஏற்கனவே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  தமிழ்நாடு முழுக்க உள்ள மசாஜ், ஸ்பா போன்றவற்றில்  வேலை செய்யும் பெண்கள், அந்த தொழிலுக்குள் எப்படி வருகிறார்கள்?, ஆன்லைன் பாலியல் மோசடிகள் ஆகியவற்றை மையப்படுத்தி பகாசூரன் எடுக்கப்பட்டுள்ளது. 


சலசலப்பு:


இதனிடையே பகாசூரன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, நான் செல்வராகவனை பார்த்து தான் சினிமாவிற்கு வந்தேன். காதல் கொண்டேன் படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பிறகு, மக்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து இந்த இடத்திற்கு வர வேண்டும் என நினைத்தேன். 






நான் ஏதோ ஒரு சமூகத்தை எதிர்த்து படம் பண்ண வேண்டும் என்று நினைத்து சினிமாவிற்கு வரவில்லை. அது எல்லாமே அமைந்தது என தெரிவித்தார். அப்போது அவரிடம் ருத்ரதாண்டவம் படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக எடுக்கப்பட்டதே என்ற கேள்வியெழுப்பப்பட்டது. இதனால் டென்ஷனான மோகன் ஜி என்ன சாதி பிரச்சினையை அதுல பார்த்தீங்க என திரும்பி கேள்வியெழுப்பினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. 


இயக்குனர்களுக்கு பொறுப்பு:


நான் சினிமாவில் பெரிதாக யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. என்னுடன் வேலை செய்பவர்கள் தான் என் நண்பர்கள். சினிமாவில் ஒரு சமநிலை வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு வெற்றிமாறன் சொன்ன கருத்து விவாதமாக மாறிவிட்டது. இயக்குநர்களுக்கு இந்த பொறுப்பு உள்ளது. இதற்கு பிறகு வரும் படங்கள் அந்த பொறுப்பை உணர்ந்து இருக்கும்.  இதற்கு பிறகு நிறைய சமூக பொறுப்புள்ள படங்கள் வரும் எனவும் மோகன் ஜி தெரிவித்துள்ளார். 


இந்த படம் பார்க்கும் போது எது உண்மை சம்பவம், எது திணிக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கே புரியும். திரௌபதி இந்த சமூகத்தில் நடந்த சம்பவம் தான். எடுத்த கதை எனக்கு சாதி அடையாளம் கொடுத்தது. ஜாதி உள்ளதா என்றால் கண்டிப்பாக உள்ளது. ஆனால் எனக்கு தேவை இல்லை. அடித்தட்டு மக்கள் முன்னேறி வர இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது. இரண்டு நாட்கள் முன்பு வெற்றிமாறன் அதை தானே சொன்னார். அதை யார் சொன்னது என்பதில் தான் உள்ளது. வெற்றி மாறன் சொன்னால் வேறு நான் சொன்னால் வேறு. 


அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் நான் படம் பார்க்க அழைக்க உள்ளேன். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பற்றிய படம் கண்டிப்பாக எனது இயக்கத்தில் வரும் என மோகன் ஜி கூறியுள்ளார்.