நடப்பாண்டில் முதல் முறையாக நடைபெற உள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடரில், பங்கேற்க உள்ள வீராங்கனைகளுக்கான ஏலம் நேற்று மும்பையில் நடந்து முடிந்தது. இதில் பல வீராங்கனைகளை கோடிகளை கொட்டி, அணிகளின் நிர்வாகங்கள் ஏலத்தில் எடுத்தன. அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த அல்-ரவுண்டரான ஹேமலதா தயாளனை அவரது அடிப்படை ஏலத்தொகையான 30 லட்ச ரூபாய்க்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்திய அணியில் ஹேமலதா..
28 வயதான ஹேமலதா கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் தொழில்முறை கிரிக்கெட் சார்ந்த முறையான பயிற்சிகளை பெற தொடங்கினார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக விளையாடி அதன் மூலம் இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்தார். மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியில் அறிமுக வீராங்கனையாக களம் கண்டார். டி20 கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமானார்
கடந்த 2018ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் மூலம், இந்திய அணிக்கான 125வது வீராங்கனையாக ஹேமலதா சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அதே ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில், இந்திய அணிக்கான டி-20 தொடரில் முதன்முறையாக களமிறங்கினார். இறுதியாக இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார்.
சென்னையை சேர்ந்த ஹேமலதா..
வலது கை பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சாளரான (ஆஃப் பிரேக்) ஹேமலதா, சென்னை - வளசரவாக்கம் ஆழ்வார்த்திருநகரை சேர்ந்தவர் ஆவார். கல்லி கிரிக்கெட் களத்தில் இருந்து தொழில்முறை கிரிக்கெட் விளையாட தொடங்கியவர். கடந்த 2018-ல் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். இதுவரை 9 ஒருநாள் மற்றும் 15 டி20 என சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் மிதாலி ராஜை வழிகாட்டியாக கொண்ட குஜராத் அணியால், தமிழகத்தை சேர்ந்த ஹேமலதா தயாளன் அவரது அடிப்படை ஏலத்தொகையான 30 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். மகளிர் பிரீமியர் லீக்கிற்கான ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரே தமிழக வீராங்கனையும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் அணி வீராங்கனைகள்:
ஆஸ்லே கார்ட்னர் (AUS) – ரூ. 3.2 கோடி
பெத் மூனி (AUS) – ரூ. 2 கோடி
சோபியா டன்க்லே (ENG) - ரூ. 60 லட்சம்
சினே ராணா - ரூ 75 லட்சம்
அன்னாபெல் சதர்லேண்ட் (AUS) - ரூ 70 லட்சம்
டியான்ட்ரா டாட்டின் (WI) - ரூ 60 லட்சம்
ஹர்லீன் தியோல் - ரூ 40 லட்சம்
சப்பினேனி மேகனா ரூ.30 லட்சம்
ஜார்ஜியா வரேஹம் (AUS) - ரூ.75 லட்சம்
மான்ஷி ஜோஷி - ரூ.30 லட்சம்
மோனிகா படேல் - ரூ.30 லட்சம்
தனுஜா கன்வெர் - ரூ.50 லட்சம்
சுஷ்மா வர்மா - ரூ.60 லட்சம்
ஹர்லே கலா - ரூ.10 லட்சம்
அஷ்வனி குமாரி ரூ.35 லட்சம்
பருனிகா சிசோடியா - ரூ.10 லட்சம்
ஷப்னம் ஷகில் - ரூ.10 லட்சம்
தயாளன் ஹேமலதா - ரூ.30 லட்சம்