ஒரு ரூபாய் கூடவும் வேண்டாம்; குறையவும் கூடாது: கணவருக்கு கொடுக்கும் அதே சம்பளத்தைக் கொடுங்கள் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது


சம வேலை, சம ஊதியம். இது நமது அரசியல் சாசனத்தில் இருந்தாலும் கூட இதுவரை எந்த ஒரு தொழிலும் அது பின்பற்றுவதற்கான அடையாளம் இல்லை. ஊதிய பேதத்துக்கு மிகப்பெரிய உதாரணம் கனவுத் தொழிற்சாலையான சினிமா தொழிற்சாலை.


சஞ்சய்லீலா பன்சாலி படத்திலிருந்து விலகல்..


சஞ்சய்லீலா பன்சாலியின் பைஜூ பாவ்ரா படத்தில் ரன்வீர் சிங்கும் அவரது காதல் மனைவி தீபிகா படுகோனேவும் ஜோடி சேர்வதாக இருந்தது. இது ரன்வீர், தீபிகா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தீபிகா திடீரென படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தீப்வீர் ‘DeepVeer’  ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.


தீபிகா படுகோனே இந்தப் படத்தைப் புறக்கணித்தற்கான காரணம் பாலிவுட் இன்டஸ்ட்ரியில் மிகவும் புதிது. தனது கணவர் ரன்வீர் சிங்குக்கு கொடுக்கும் அதே சம்பளத்தைத் தனக்கும் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போர்க்கொடி உயர்த்தியுள்ளார் தீபிகா என தகவல்கள் வெளியுள்ளது. கணவருக்குக் கொடுக்கும் சம்பளத்தைவிட அதிகமாக ஒரு ரூபாய் வேண்டாம் அதே வேளையில் அவருக்கு அளிப்பதை விட ஒரு ரூபாய் குறைவாகக் கொடுத்தாலும் ஏற்பதற்கு இல்லை என்று கூறியுள்ளார் தீபிகா. தீபிகாவின் இந்த சுயமரியாதைக் குரல் பாலிவுட் வட்டாரம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகில் ஒட்டுமொத்தமாக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.


தீபிகா ரன்வீர் ஜோடி சஞ்சய் லீலா பன்சாலியின் ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆனால் இந்த சர்ச்சை குறித்து சஞ்சய் லீலா பன்சாலியின் தயாரிப்பு நிறுவனம் கூறுகையில், இதுவும் ஒருவிதத்தில் நல்லதே. அடுத்தடுத்து 4 படங்களில் ரன்வீர் , தீபிகா இது ரசிகர்களுக்கும் ஓவர் டோஸ்தானே! சில நேரங்களில் பிரச்சினைகள் வரும்போது இப்படியான நேர்மறையான பார்வையைக் கொள்ளவேண்டும். இருந்தாலும், தீப்வீர் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தீபிகா சம அளவில் ஊதியம் கேட்டதற்கு பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்புகள் இருந்தாலும், பெண்ணியவாதிகள் இந்தக் குரல் இந்தியா முழுதும் ஒலிக்க வேண்டும் என்றே விருப்பம் தெரிவித்துள்ளனர். தீபிகா படுகோனே தற்போது ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை ஊதியம் பெறுகிறார். சில படங்கள் ஹீரோயின்களால் மட்டுமே வசூலை அள்ளிக் குவித்தாலும் சம்பளங்கள் மாறுவதில்லை. தீபிகாவின் தொடக்கப்புள்ளி அருகே நிறைய தொடர்புள்ளிகள் நீளட்டும்.