திரைத்துறையில் ஆஸ்கார் விருதுகளுக்கு இணையான, உயரிய விருதுகளில் ஒன்றாக பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் எனப்படும் பாஃப்டா (BAFTA) விருதுகள் கருதப்படுகின்றன.


இந்த பாஃப்டா விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்நிலையில், பாஃப்டா விருதுகளுக்கான பரிந்துரைகளின் இறுதிப் பட்டியல் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து, இயக்குநர் ஷானக் சென்னின் ’ஆல் தட் ப்ரீத்ஸ்’ சிறந்த ஆவணப்படத்துக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


 






கான்ஸ் உள்பட ஏற்கெனவே பல சர்வதேச திரைப்பட விருதுகளை இப்படம் வென்றுள்ள நிலையில், பாஃப்டா விருதையும் ஆல் தட் ப்ரீத்ஸ் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக வெளியான பாஃப்டா முதல்நிலை தேர்வுப் பட்டியலில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பரிந்துரையாகி கவனமீர்த்தது. ஆனால் இன்றைய இறுதிப் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் இடம்பெறவில்லை.


முன்னதாக 2023ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வுப்பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்ற நிலையில், எண்ணற்ற ரசிகர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து சமூக வலைதளங்களில் தெரிவித்தன.


அதேபோல் சென்ற வாரம் நடைபெற்ற கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த பாடலுக்கான விருதை வென்று கவனமீர்த்தது.


தொடர்ந்து ஜன.16ஆம் தேதி நடைபெற்ற க்ரிட்டிக் சாய்ஸ் விருது விழாவில், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த பாடல் என இரண்டு விருதுகளை ஆர்.ஆர்.ஆர் படம் வென்றுள்ளது.


 






அந்த வரிசையில் உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான பாஃப்டா விருதையும் ஆர்.ஆர்.ஆர் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப்பட்டியலில் இடம்பெறாமல் ஆர்.ஆர்.ஆர் வெளியேறியுள்ளது.