பப்லு ப்ரித்விராஜ்


1979இல் வெளியான நான்  வாழவைப்பேன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பப்லு பிரித்விராஜ். அதன் பின்னர், மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த பப்லு பிரித்விராஜ் கே. பாலசந்தர் இயக்கிய  'வானமே எல்லை' திரைப்படத்தில் நடித்தார்.


அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான ‘அவள் வருவாளா’ படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த, பப்லு பிரித்விராஜூக்கு ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. இந்த நிலையில்தான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று சிம்புவுடன் நடந்த சண்டையால் மீண்டும் பேசுபொருளானார். அரசி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த இவர் தற்போது  ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடித்து வருகிறார்.


சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலமாக இருந்து வரும் பப்லு ப்ரித்விராஜ் தனது நடிப்பிற்காக பாராட்டுக்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் தாக்கம் செலுத்தக் கூடிய கதாபாத்திரங்கள் அவருக்கு அமையவில்லை.


அனிமல்


சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார் பப்லு. ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தில் ஒரு சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் பப்லு ப்ரித்விராஜ் நடித்திருந்தார். அனிமல் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அந்தப் படத்தில் நடித்த பாபி தியோல், ட்ரிப்தி டிம்ரி , பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்டவர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்க்ள்.






இந்நிலையில், பப்லு ப்ரித்விராஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில். சமீபத்தில் தான் இண்டிகோ விமானத்தில் சென்றதபோது விமான ஊழியர்கள் தன்மீது அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். தான் சினிமாவில் 50 ஆண்டுகாலமாக போராடி வருவதாகவும், அனிமல் திரைப்படம் ஒரே இரவில் தன்னை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அனிமல் பாக்ஸ் ஆஃபிஸ்


அனிமல் திரைப்படம் வெளியாகிய 9 நாட்களில் உலக அளவில் 600 கோடிகளை வசூல் செய்துள்ளது. அதே நேரத்தில் அனிமல் படத்திற்கு விளையாட்டு வீரர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை கடுமையான விமர்சனங்கள் முன்வைத்து வருகின்றனர்.