நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு  வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன்  ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. 


கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.  பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குநர்களாக பணிபுரிந்தனர்.





வெளியான சமயத்தில் மோசமான தோல்வியை தழுவிய பாபா திரைப்படம், மீண்டும் புதுப்பொலிவுடன் திரைக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. மேலும் முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு (எடிட்டிங்) செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, தற்போதைய நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படத்திற்கான டப்பிங் வேலைகளும் முழு வீச்சில் நடந்து முடிந்தது.






 


சில தினங்களுக்கு முன், இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. இதைத்தொடர்ந்து, இன்று மற்றொரு போஸ்டர் வெளியாகியிருந்தது. அதில், இன்று ஆறு மணிக்கு பாபா படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்ற தகவல் இடம் பெற்றது.


 


                                     


அதன்படி, படக்குழுவினர் சொன்னபடியே, 6 மணிக்கு பாபா பட புது வெர்ஷனின் ட்ரெய்லர் ரஜினிகாந்து வெளியிட்டார். ஆனால் அந்த ட்ரெய்லரை பார்த்த சில ரசிகர்கள், பெரிதாக ஒன்றுமில்லையே என்ற கருத்துக்களை பதிவிட்டனர்.


 






இந்த நிலையில் ரஜினி, முதலில் ஷேர் செய்த அந்த ட்விட்டர் பதிவை சில நிமிடங்களில் டெலிட் செய்தார். அடுத்த சில நொடிகளில் பாபா படத்தின் புதிய டிஜிட்டல் வெர்ஷன் ட்ரெய்லர் ரஜினி ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்றது. இப்போது, பாபா ட்ரெய்லரை பலரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.