பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி தொடரில் துணை கேரக்டரில் நடித்து வந்த அவருக்கு சிறகடிக்க ஆசை சீரியலில் மெயின் கேரக்டரே அமைந்தது. அதில் போலீசாக வரும் அருணின் அம்மா கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் பனி விழும் மலர்வனம் சீரியலிலும் நடித்துள்ளார். அதனைத் தவிர சினிமாவில் சில படங்களில் ராஜேஸ்வரி நடித்துள்ளார்.
இந்த நிலையில் ராஜேஸ்வரி குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனது தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இப்படியான நிலையில் அளவுக்கதிகமான ரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட மாத்திரையை சாப்பிட்டு அவர் தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது.
மயங்கிய நிலையில் கிடந்த ராஜேஸ்வரியை மீட்டு அவரின் குடும்பத்தினர் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் ராஜேஸ்வரி உயிரிழந்தார். அவருடைய மறைவு சின்னத்திரை வட்டாரம் மட்டுமல்ல ரசிகர்களிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராஜேஸ்வரி 24 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே கடந்த சில நாட்களாக ராஜேஸ்வரிக்கும், சதீஷூக்கும் குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தனது கணவருடன் சண்டை போட்டு விட்டு டிசம்பர் 8 ஆம் தேதி சைதாப்பேட்டை விஜிபி சாலையில் உள்ள தன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த 3 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் நேற்றிரவு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)