இயக்குநர் தங்கர்பச்சானின் அழகி படம் மீண்டும் ரிலீசாகவுள்ள நிலையில் படக்குழுவினரின் சிறப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 


அழகி ரீ ரிலீஸ்:


தமிழ் சினிமாவில் உணர்வுகள் சார்ந்து படம் எடுப்பவர்களில் ஒருவர் இயக்குநர் தங்கர் பச்சான். பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அவர், அழகி படம் மூலம் இயக்குநரானார். இந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, விவேக், பிரமிட் நடராஜன், மோனிகா என பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படம், இயக்குநர் தங்கர்பச்சான் தான் எழுதிய கல்வெட்டுக்கள் என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டு எடுத்திருந்தார். இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 


இந்த படம் வரும் மார்ச் 29 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. இதனை முன்னிட்டு 4கே தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு புதிய ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. இப்படியான நிலையில் படத்தில் நடித்த நடிகர்கள் பேசிய சிறப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் கட்டையன், கட்டசி என்ற கேரக்டரில் நடித்தவர்களின் தற்போதைய தோற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 



அழகி படத்தில் கட்டையன் என்ற கேரக்டர் நான் பண்ணியிருந்தேன். இப்போது தமிழக கடலோர காவல்படையில் வேலை பார்த்துட்டு வருகிறேன். வடையை தூக்கிட்டு போறது, பள்ளியில் ஆசிரியையிடம் சேட்டை செய்வது, கடலை எடுத்துட்டு போறதுன்னு கிராமத்துல நடக்குற எல்லா விஷயமும் அதில் வந்திருக்கும். 22 ஆண்டுகளுக்குப் பின் அழகி படம் ரீ-ரிலீஸ் ஆகப்போகுது. எல்லாரும் குடும்பத்தோடு போய் பார்த்து மகிழுங்கள். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்த தங்கர் பச்சானுக்கு மற்றும் படக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 




அழகி படத்தில் கட்டசி என்ற கேரக்டரில் சரஸ்வதி என்ற பெண் நடித்திருந்தார். அவர் பேசும்போது, ‘சின்ன வயதில் என்னை பாண்டிச்சேரியில் பார்த்து படம் நடிக்க கூப்பிட்டு போனார்கள். அப்ப பண்ருட்டி, பத்திரகோட்டை அங்கெல்லாம் ஷூட்டிங் நடந்தது. அங்கு பனம்பழம் தலையில விழுறது உள்ளிட்ட காட்சிகள் எடுத்தாங்க.என் நண்பர்களுடன் நடித்தது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.


அதன்பிறகு ஒருநாள் தங்கர்பச்சான் போன் பண்ணினார். அழகி படத்துக்கு விருது கிடைச்சிருக்கு, நீங்க சென்னைக்கு வரணும் என சொன்னார். அங்கு போனால் எனக்கும் தங்கர் பச்சானுக்கும் மட்டும் தான் விருது கிடைத்தது. எனக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது கிடைத்தது. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. இதன்பிறகு எனக்கு பள்ளியில விருது கொடுத்து கௌரவிச்சாங்க. அதை என்னால் மறக்கவே முடியாது” என தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Azhagi Re-Release: முதல் காதலை கொண்டாடுங்கள்.. ரீ-ரிலீசாகும் அழகி படம்.. எப்போ தெரியுமா?