தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத பொக்கிஷமாகவும், காலத்தாலும் அழியாத கலைஞராகவும் திகழ்பவர் இளையராஜா. 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, மனிதனின் அனைத்து உணர்வுகளுக்கும் இசையமைத்துள்ளார்.


இளையராஜா பாட்டு பாடிய அஜர்பைஜான் தூதர்:


இவரது இசைக்கு என்று உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அஜர்பைஜான் நாட்டில் தமிழர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர். அங்கு  தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக அஜர்பைஜான் நாட்டிற்கான இந்திய தூதர் பயணிதரன் பங்கேற்றிருந்தார்.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அங்கு வசிக்கும் தமிழர்கள் உள்பட இந்தியர்களை மகிழ்விக்கும் விதமாக பாடல் பாடி அசத்தினார். இளையராஜா இசையில் உருவான காட்டு மல்லி பாடலை பாடி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை அசர வைத்தார்.






வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை அவர் பாடியதும் அங்கு வந்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோவை அவரே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


தமிழ்நாட்டைச் சேர்ந்த IFS அதிகாரி:


அதில், அவர் பதிவிட்டுள்ளது, "சமீபத்தில் அஜர்பைஜானில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில், வழக்கமான தலைமை விருந்தினர் பாத்திரத்திலிருந்து ஒரு சிறிய அடி எடுத்து வைத்து, வித்தியாசமான ஒன்றை முயன்றேன். இளையராஜாவின் சமீபத்திய முத்தான "வழி நெடுக காட்டு மல்லி" பாடலைப் பாடினேன். நான் மேடையில் பாடிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மேடையில் ஒலி அமைப்பிலும் சில சிக்கல்கள். பாடியது என் எதிர்பார்ப்புக்கு வரவில்லை என்றாலும், கனிவான பார்வையாளர்களின் அன்பும் ஊக்கமும் அந்தத் தருணத்தை அழகாக எடுத்துச் சென்றன.  முன்பு வீட்டில் சும்மா பயிற்சிக்குப் பாடி என் தொலைப்பேசியில் பதிவு செய்த குரலை மட்டும் பயன்படுத்தி அந்தக் காணொளியை இங்கே வழங்குகிறேன். நன்றி


தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட பயணிதரன் ஒரு இந்திய அயலுறவு பணி அதிகாரி ஆவார். உலகின் பல நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்திய தூதராக மட்டுமின்றி எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறன் கொண்டவராக இவர் திகழ்கிறார்.


அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற்றபோது அஜித்குமார் உள்பட படக்குழுவினரை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்தார். மேலும், அஜர்பைஜானில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியும் சிறப்பாக நடைபெற முழுவீச்சில் பணியாற்றினார். அங்கு வந்த இந்திய வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.