Ayesha Khan on Physical Abuses Inside Cini Industry : சமூகம் எந்த அளவிற்கு முன்னேறி சென்றாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஒரு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதுவரையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை தங்களுக்குள்ளேயே அடக்கி வைத்து குமுறிய காலங்கள் போய் இப்போது மீ டூ இயக்கமாக உருவெடுத்ததன் மூலம் வெளிப்படையாக பேச துவங்கிவிட்டார்கள். பலன் கிடைத்ததா என்பது ஐயமே..


இது போன்ற கீழ் தரமான விஷயங்கள் சினிமா துறையில் மட்டும்தான் நடக்கிறது என சொல்ல முடியாது. அனைத்து துறைகளிலும் இருக்கும் பெண்களும் இது போன்ற ஒரு பிரச்சனையை கடந்து செல்ல நேரிடுகிறது. இருப்பினும் பெண்கள் அதை வெளிப்படையாக பேச ஆரம்பித்ததில் இருந்து ஒரு இது போன்ற பிரச்னைகள் கொஞ்சம் குறைந்து வந்தாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.


 




அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17-வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் நடிகை ஆயிஷாகான். சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் அவர் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், தன்னை சுற்றி இருந்த ஆண்கள் எப்படி அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை  வெளிப்படையாக சில நிகழ்வுகள் பற்றி பேசி இருந்தார். 


ஆயிஷா கான் பேசுகையில் பல விரும்பத்தகாத சம்பவங்களை நான் எதிர்கொண்டுள்ளேன். நிர்வாக நிறுவனம் ஒன்று போட்டோஷூட் செய்து தருவதாக கூறினார்கள். அவர்கள் எனக்கு சில ஆடைகளை கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னார்கள். அவர் ஒரு நெட்டட் டாப் ஒன்றைக் கொடுத்தார்கள். நான் இந்த உடைக்கு உள்ளாடை அணிந்து கொள்கிறேன் என சொன்னதும் எதிரில் இருந்த அந்த நபர் "இல்லை இந்த உடை கவர்ச்சியாகவும் கிளுகிளுப்பாகவும் இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். அதனால் உள்ளாடை அணிய வேண்டாம்" என கூறிவிட்டார். 


 




உடையில் மேல் பாகம் முழுவதும் நெட் துணியால் இருந்தால் அதை எப்படி போட முடியும் என நான் வெளிப்படையாகவே கேட்டுவிட்டேன். "இல்லை அந்த நெட் பகுதி உங்கள் மார்புக்கு மேலேதான் இருக்கும்" என்றார். என்னுடைய எதிரிலேயே அவர் உட்கார்ந்து இருக்கும்போது அது எப்படி சாத்தியப்படும் என நிராகரித்துவிட்டேன்.


ஒரு வேலையை செய்வதற்கு நான் ஒருபோதும் என்னை சங்கடப்படுத்தி கொள்ள விரும்பமாட்டேன். ஒரு சில எல்லைகளை மீறக்கூடாது என்பதை நான் வகுத்துள்ளேன் என்றார் ஆயிஷா. 


மேலும் அவர் பேசுகையில் ”இது போன்ற சம்பவங்கள் சினிமாவில் மட்டும் கிடையாது. ஒரு முறை நான் ஜூஹூ பீச்சுக்கு சென்று இருந்தேன். அப்போது என்னை சுற்றி மூன்று நான்கு நபர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் போனில் பேசுவதுபோல, என்னை நோக்கி தவறாக பேசினார்கள். நான் அவர்களை எதிர்கொண்டு கேட்டதற்கு நான் உங்களிடமா பேசினேன்? போன் காலில்தானே பேசினேன் என அலட்சியமாக பதில் அளித்தார்கள். நடுக்கத்தில் அங்கிருந்து உடனே கிளம்பினேன். பெண் ஒருவரின் நோக்கத்தை, தொடுவது மூலமாக மட்டுமல்ல பார்வையால் கூட உணர முடியும்” என்றார் ஆயிஷா.