கோவை செட்டிபாளையம் பகுதியில் வருகின்ற 12 ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்தியா கூட்டணி சார்பில்  நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


ஏபிபி நாடுவிற்கு அளித்த பேட்டி


இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார்.


கேள்வி : இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?


பதில் : ”இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிகச்சிறப்பாக இருக்கிறது என அனைத்து தரப்பினரும் சொல்கிறார்கள். கருத்துக் கணிப்புகள் கூட எங்களுக்கு சாதகாமாக உள்ளது. அதனால் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை இந்தியா கூட்டணி பெறும்”


கேள்வி : மீண்டும் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரைக்காக கோவைக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?


பதில் : ”அவர் திரும்ப திரும்ப வருவது நாங்கள் வலிமையடைந்து வருவதை காட்டுகிறது”


கேள்வி : கோவை அதிமுகவின் கோட்டை, இதில் யாரும் உள்ளே நுழைய முடியாது என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?


பதில் : ”அப்படி அவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அதை வேண்டாம் என சொல்லவில்லை. திமுக முதலிலேயே கையில் எடுத்து விட்டது. அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை”




கேள்வி : கோவையில் 60 சதவீத வாக்குகளை பாஜக பெறும் என்ற அண்ணாமலையின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?


பதில் : ”அவர்கள் அப்படி தான் சொல்வார்கள். ஒட்டு எண்ணிக்கையின் போது உண்மை என்ன எனத் தெரியும்”


கேள்வி : தேர்தல் களம் திமுக - பாஜக என மாறிவிட்டதாக பாஜக தலைவர்கள் கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள்?


பதில் : ”அவர்கள் எப்படி இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம்”


கேள்வி : கடந்த தேர்தலில் முக்கிய பங்காற்றிய செந்தில் பாலாஜி இல்லாதது திமுகவிற்கு பின்னடைவை தருமா?


பதில் : கண்டிப்பாக கடந்த தேர்தல்களில் மிகப்பெரிய பணியை அவர் செய்தார். இப்போது அவர் எங்கள் பக்கத்தில் இல்லாதது சின்ன சங்கடமாக இருக்கிறது. ஆனாலும் அவர் செய்த பணியை நாங்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டு செல்வதால், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அவர் இல்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. அவர் சீக்கிரம் வந்து விடுவார் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது”


ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம்


இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துச்சாமி, “தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவரும்,  இந்திய கூட்டணி அமைவதற்கு  முக்கியமானவராக  இருந்த தலைவர்களில் ஒருவரான மு.க.ஸ்டாலின் த ஒவ்வொரு நாடாளுமன்ற  தொகுதிக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து செட்டிபாளையம் அருகே 150 ஏக்கர் பரப்பளவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்த பிரச்சார கூட்டத்திற்கு ஏறத்தாழ 1.50 இலட்சம் பேருக்கு மேல் வர உள்ளனர். காங்கிரஸ் கட்சியினுடைய முன்னணி தலைவர் ராகுல் காந்தி அவர்களும் வருகை தர உள்ளார். எனவே மிகுந்த முன்னேற்பாடுகளோடு நாங்கள் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்திருக்கிறோம். எனவே தான் வாகனம் நிறுத்துவதற்கான இடம், அடிப்படை வசதிகளுடன் கூடிய அனைத்து வசதிகளும் இருக்கும் அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. 


ஒன்னறை லட்சம் பேர் வர உள்ள நிலையில், வந்து செல்லக்கூடியவர்களுக்கு எந்த விதமான சிறு பிரச்சனைகளும் இல்லாமல் பாதுகாப்பாக பொதுமக்கள் வந்து செல்ல வேண்டும் என்ற ஏற்பாட்டையும் நாங்கள் செய்து கொண்டுள்ளோம். குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.