சூர்யா மற்றும் தமன்னா நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அயன்’. விறுப்பான காட்சிகளுடன் , சுவாரஸ்ய கதைக்களத்துடன் உருவான இந்த படத்தை மறைந்த இயக்குநர் ’கே.வி ஆனந்த்’ இயக்கியிருந்தார். படத்தின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.  15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படம் , கிட்டத்தட்ட 80 கோடிக்கு வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது. படத்தில் இடம்பெற்ற “பள பளக்குற பகலா நீ “ என்ற பாடல் பல நாடுகளில் எடுக்கப்பட்டிருந்தது. அதில் சூர்யா அந்த மக்களின் ஆடைகளை அணிந்து, அவர்களின் நடனங்களை ஆடியிருப்பார். அதிக பட்ஜெட்டில் உருவான இந்த பாடல் இப்போதும் பலரின் மொபைல் லிஸ்டில் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜாஜி நகரை  சேர்ந்த “செங்கச்சோல பாய்ஸ் “ என்ற குழுவை சேர்ந்த இளைஞர்கள்  அந்த பாடலை அப்படியே ரி கிரியேட் செய்திருந்தனர். அதில் சூர்யாவை போலவே நடனமாடியது மட்டுமல்லாமல் பாடலில் இடம்பெற்ற  காட்சி அமைப்புகளையும் செய்திருந்தனர். மேலும் ஆண்ட்ராய்ட் மொபைல் கொண்டே காட்சிகளை எடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது இணையத்தில் வைரலானது. 







இது குறித்து அறிந்த நடிகர் சூர்யா மிகவும் பிடித்திருப்பதாக ட்வீட் செய்திருந்தார். மேலும் அந்த கேரள இளைஞர்களை பாராட்டி ஆடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் “ நீங்க எல்லோரும் பண்ணியிருக்கக்கூடிய இந்த வீடியோ எவ்வளவு சிறப்பானது தெரியுமா?!நான் ரொம்ப ரசிச்சேன், அயன் திரைப்படம் திரைக்கு வந்து 10 வருடங்களுக்கு மேல ஆகிடுச்சு ஆனாலும் அதை அப்படியே கண் முன்னால கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி , கே.வி.ஆனந்த் சார் பார்த்திருந்தா ரொம்ப சந்தோசப்பட்டிருப்பாரு. வாழ்க்கையில எதுவுமே இல்லைனாலும் ஈடுபாடு மட்டும் இருந்தா போதும்னு  நீங்க இந்த காட்சிகள் மூலம் சொல்லாம சொல்லியிருக்கீங்க, மற்றவங்களுக்கு நீங்க அனைவரும் முன் உதாரணம் “ என பெருமை பட பேசியிருந்தார்.  இந்நிலையில் அந்த இளைஞர்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் நிக்கி கல்ராணி  நடிக்கும் ’வீருண்ணா’ என்ற மலையாளத் திரைப்படத்தில் இந்த இளைஞர்கள் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் இதனையடுத்து அந்த இளைஞர்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. முன்னதாக இந்த இளைஞர்கள் அயன் படத்தின் சண்டைக்காட்சி ஒன்றையும் ரி கிரியேட் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.