சமீபத்தில் ஜீ 5 ஓடிடியில் வெளியான இணைய தொடர் அயலி. 1990ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் மூலையில் இருக்கும் ஒரு கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்களையும் கட்டுப்பாடுகளையும் கைவிடாமல் வாழும் மக்களின் கதையை மையமாக கொண்டது.
கைதட்டலை அள்ளிய இயக்குநர் :
மக்களிடையே அமோகமான வரவேற்பை பெற்ற இந்த இணைய தொடர் மூலம் இயக்குநர் முத்துக்குமார் சொல்ல வந்த பெண்களின் வழியை அருமையாக வெளிப்படுத்தி கைதட்டலை பெற்றுவிட்டார். இயக்குநர் முத்துகுமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் லிங்கா, சிங்கம்புலி, அனுமோல், மதன், அபி நக்ஷத்திரா, லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஒவ்வொருவரும் அவரவரின் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் வாழ்ந்து இருந்தனர்.
அயலி சீசன் 2 :
சமீபத்தில் அயலி படக்குழுவினருடன் நேரக்காணல் ஒன்றை நடத்தியது ABP நாடு. இப்படத்தில் தங்களது அனுபவம் குறித்து பல ஸ்வாரஸ்யமான தகவலை பகிர்ந்தனர் படக்குழுவினர். படத்திற்கு கிடைத்திற்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. கிராமமே தெய்வமாக வழிபடும் அயலியும், பாதிக்கப்பட்ட ஓர் அபலைப் பெண்ணாக இருந்து இருக்கலாம் என்பதை லீட் செய்து அயலி படத்தின் அடுத்த சீசன் வர வாய்ப்புகள் உள்ளதா என இயக்குனர் முத்துக்குமாரின் கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில் பலரும் அவரவர்களின் கருத்துகளை முன்வையுங்கள். அதில் இருந்து பெட்டரான ஒரு கதையை வைத்து அடுத்த சீசன் உருவாக்குவதை பற்றி யோசிக்கலாம் என்றார். அதனால் ஒரு நல்ல திரைக்கதை அமைந்தால் நிச்சயம் அயலி சீசன் 2 வர வாய்ப்புகள் உள்ளன.
ஏன் அயலி தியேட்டரில் வெளியிடப்படவில்லை?
அயலி திரைப்படத்தை இணைய தொடராக வெளியிடாமல் வெள்ளித்திரையில் திரைப்படமாக வெளியிட்டு இருந்தால் இன்னும் அதிகமாக வரவேற்பு கிடைத்து இருக்கும். அந்த உணர்ச்சிகள் மிகவும் அழகாக வெளிப்பட்டு இருக்கும் என்ற வருத்தம் உங்களுக்கு இருந்ததா என இயக்குனரிடம் கேட்கப்பட்டது. இயக்குநர் முத்துக்குமார் பதிலளிக்கையில் "படத்தின் ப்ரிவியூ காட்சி திரையரங்கில் தான் திரையிடப்பட்டது. அந்த சமயத்திலேயே அந்த உணர்ச்சிகளை நாங்கள் பீல் செய்தோம். பலரும் அயலி படத்தை திரைப்படமாக வெளியிட்டு இருக்கலாமே என கேட்டார்கள். ஆனால் அயலி படத்தில் ஏராளமான கதையம்சங்கள், லேயர்கள் உள்ளன. அவை அனைத்தையும் விலாவரியாக சொல்ல நேரம் அதிகமாக தேவைப்படும். ஆனால் இதை திரைப்படமாக்க வேண்டும் என்றால் அதற்கு கதையை சுருக்க வேண்டும். திரைப்படத்திற்கு நேரம் குறைவு என்பதால் கதையை அதிகமாக வெட்ட வேண்டிய தேவை இருந்து இருக்கும். அப்போது படத்தின் முழுமையான பீல் கொண்டு வருவது என்பது கொஞ்சம் சிரமமாக இருந்து இருக்கும். படத்தை டைம் லிமிட்டுக்குள் முடிக்க முயற்சி செய்து பார்க்க வேண்டும்" என்றார் இயக்குநர் முத்துக்குமார்.