நடிகர் விசு இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தின் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை அதன் தயாரிப்பு ஏவிஎம் நிறுவனத்தின் தற்போதைய கிரியேட்டிவ் இயக்குநர் அருணா குகன் தெரிவித்துள்ளார்.
ரஜினி நடித்த நல்லவனுக்கு நல்லவன் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் விசு. அந்த படத்தின் வெற்றியால் விசுவிற்கு படம் இயக்கும் வாய்ப்பை ஏவிஎம் நிறுவனம் வழங்கியது. 1975 ஆம் ஆண்டு மேடை நாடகமாகவும், ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கத்தில் ‘உறவுக்கு கை கொடுப்போம்’ படத்தை ரீமேக் செய்ய விசு முடிவெடுக்கிறார். இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. காரணம் ‘உறவுக்கு கை கொடுப்போம்’ மிகப்பெரிய தோல்வியைத் தழுவிய படம் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் விசுவின் உறுதியான முடிவால் ஏவிஎம் நிறுவனம் சம்மதம் தெரிவிக்கிறது.
அதுதான் இன்றளவும் அனைத்து தலைமுறையும் கொண்டாடும் “சம்சாரம் அது மின்சாரம்” படமாகும். 1986 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தனக்கே உரிய பாணியில் புதுமைகளைப் புகுத்தி ரகுவரன், லட்சுமி, மனோரமா, சந்திரசேகர் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களால் கொண்டாடப்படும் குடும்ப காவியம் என சொல்லப்படும் படங்களின் வரிசையில் இப்படத்திற்கு என்றும் இடமுண்டு. இப்படம் மத்திய அரசின் தங்கத் தாமரை விருதையும் வென்றது.
இப்படத்தில் மனோரமாவின் “கண்ணம்மா..கம்முன்னு கெட” என்ற வசனம் மிகப் பிரபலமானது. படத்தில் காமெடி காட்சிகள் இல்லாமல் இருந்த நிலையில் இந்த காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. சம்சாரம் அது மின்சாரம் படத்தின் 2 ஆம் பாகத்திற்கான கதை தன்னிடம் உள்ளதாகவும், ஆனால் தயாரிப்பாளர் அமையவில்லை என்றும் விசு மறைவுக்கு முன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் ஆரம்பக் கதையில் இல்லாத அற்புதமான கதாபாத்திரம்....மனோரமா ஆச்சியின் கதாபாத்திரம் கதையில் இல்லை என அப்படத்தின் கிளாஸிக் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஏவிஎம் நிறுவனத்தின் தற்போதைய கிரியேட்டிவ் இயக்குநர் அருணா குகன் தெரிவித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.