தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தின் ஏவிஎம் குமரன் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் இன்றைய காலத்து சினிமா பிரமாண்டம் என்ற பெயரில் காசை வீணாக விரயம் செய்கிறார்கள் என்றும் தென்னிந்தியாவில் நடிகைகளே இல்லை என்பது போல வடநாட்டில் இருந்து நடிகையை இறக்குமதி செய்வதில் தனக்கு துளியும் ஈடுபாடு இல்லை என்பது குறித்து மிகவும் வெளிப்படையாக பேசி உள்ளார்.
”இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ண வேண்டும் என்றால் பாரம்பரியமான தயாரிப்பாளர்களை வைத்து படம் எடுக்க முடியாது. ஏதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்து தான் செய்ய வேண்டும். அதற்கு காரணம் சினிமாவை தேவையே இல்லாமல் செலவு செய்து வளர்த்து விட்டார்கள். 20 பேர் ஆட வேண்டிய இடத்தில் 200 பேர் ஆடுகிறார்கள். ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் கிராபிக்ஸ் மூலம் தான் நடக்கிறது. அடுத்ததாக கதையே இல்லாமல் ஒரு படத்தை எடுக்கிறார்கள். முக்கால் வாசி படங்களில் செலவு செய்து இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் என்ன செலவு செய்தார்கள் என்றே புரிய மாட்டேங்குது.
ஒரு பாடலுக்காக ஏதோ ஒரு மூளை முடுக்கில் போய் பிரமாதமாக ஷூட்டிங் செய்கிறார்கள். நிறைய விரயம் செய்து எடுக்கும் அந்த பாடல் பல சமயங்களில் ரசிகர்களை கவர தவறிவிடுகிறது. அந்த செலவை தயாரிப்பு நிறுவனங்களால் மீட்க முடியாததால் கார்ப்பரேட் கம்பெனிகளை நாடுகிறார்கள்.
அடுத்த படியாக தேவையே இல்லாமல் வட நாட்டில் இருந்து நடிகைகளை இறக்குமதி செய்கிறார்கள். அதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. நம்ம தமிழ்நாட்டில் நடிகைகளே இல்லையா அல்லது நடிகைகளுக்கு பஞ்சமா? தமிழ் சினிமாவில் இல்லாட்டியும் பரவாயில்லை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி நடிகைகளை கூட தேர்வு செய்யலாம்.
அந்த வட இந்திய நடிகைகளுக்கு என்ன காட்சி அதற்கு என்ன உணர்ச்சி கொடுக்க வேண்டும் என்பது கூட தெரிவதில்லை. அஸிஸ்டண்ட் சொல்வது போல வாயை அசைத்து விட்டு போய் விடுகிறார்கள். டப்பிங் ஆர்டிஸ்ட்கள் தான் அந்த கேரக்டருக்கு உயிரோட்டம் கொடுக்கிறார்கள். ஹீரோக்களை மற்றும் தமிழ் நடிகர்களாக போட்டு கொண்டு ஹீரோயின்களை வட நாட்டில் இருந்து இறக்குவது தேவையா? அப்படி கிளாமர் கண்டென்ட்டுக்காக வெள்ளை தோல் தேவை படுகிறது என்றால் ஒரு டான்ஸில் போட்டுக்கொள்ளலாம். அதை விட்டுவிட்டு ஹீரோயினாக போடுவது சரியில்லை. அவர்கள் அழுதால் நமக்கு சிரிப்பு தான் வருகிறது. அவர்கள் என்ன உணர்ச்சிவசப்பட்டா அழுகிறார்கள்? வட நடிகைகளை நாடி போவதன் அவசியம் என்ன என்பது புரியவில்லை. அது தேவையில்லை என்பது தான் என்னுடைய அபிப்பிராயம்” என பளிச் பளிச் என பேசி இருந்தார் ஏவிஎம் குமரன்.