ஒரு கலைஞன் தனது பயணத்தின் தொடக்கம் முதல் இன்று வரை உச்சத்திலேயே பயணிப்பது என்பது அனைவருக்கும் சாத்தியப்படாது. அப்படி போகஸ் லைட் முன்னர் முதலில் தோன்றிய களத்தூர் கண்ணம்மா முதல் இன்றைய ஏஜென்ட் விக்ரம் வரை நடித்துள்ள கமல்ஹாசனின் பயணம் யாராலும் அசைக்க முடியாத ஒரு சிம்மாசனம். ஒரு கலைஞனை பற்றி பொதுவாக இந்த உலகம் அவரின் பிந்தைய காலங்களில் ஓய்வு பெற்று இருக்கும் போது புகழ்ந்து பார்த்ததுண்டு. ஆனால் தனது திரை பயணத்தில் அன்று முதல் இன்று வரை அதே சுறுசுறுப்புடனும், உத்வேகத்துடன் இருக்கும் ஒரு கலைஞனை பெருமிதப்படுத்துவது என்பது மிகவும் அரிதான ஒரு வாய்ப்பு. அப்படி எந்த ஒரு எல்லைக்குள்ளும், வட்டத்திற்குள்ளும் சிக்காமல் குறுகிவிடாமல் தனது பாதையை தீர்க்கமான ஒரு நோக்கத்துடன் பயணம் செய்யும் ஒரே மகா கலைஞன் உலகநாயகன் கமல்ஹாசன்.
ஏ.வி.எம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பீம்சிங் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக 'களத்தூர் கண்ணம்மா' மூலம் திரையில் முதலில் தோன்றியவர் நடிகர் கமல்ஹாசன். இந்த பொடியன் பிற்காலத்தில் சினிமா உலகையே கைக்குள் அடக்குவான் என்பது 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...' என குட்டி கமல் பாடிய பாடலின் மூலமே தெரிந்தது. இந்த பொடியன் அடம்பிடித்து நடிக்க வந்த கதை பற்றி தெரியுமா... நடிகர் கமல்ஹாசன் பற்றி ஏ.வி.எம். சரவணன் தனது பேத்தி அருணா குகனிடம் கூறியதை கதையை அவர் தற்போது ட்விட்டர் மூலம் நரேட் செய்துள்ளார்.
முதலில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஒப்பந்தமானது 'யார் பையன்' படத்தின் மூலம் பிரபலமான சிறுமி டெய்சி ராணி. அந்த சூழல் டாக்டர் ஒருவர் செட்டியாரின் மனைவியை பார்க்க வந்தபோது கூடவே ஒரு சிறுவனும் அவருடன் செட்டியாரை பார்க்க வேண்டும்மென ஆசைப்பட்டு அடம் பிடித்து அங்கே வந்துள்ளார். நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தாமல் உம்மென உட்கார்ந்து இருந்த அந்த சிறுவன் பாடல்களை பாடிக் காட்டி தனது ஆசையை நிறைவேற்றினார். இப்படித்தான் ஏ.வி.எம். சரவணன் மூலம் செட்டியாருக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் அந்த சுட்டி பையன். பின்னர் செட்டியாரிடம் டெய்சி ராணியை போல நடிக்க தெரியுமா என்பதற்கு முடியும் என தலையை ஆட்டி நினைத்ததை நிறைவேற்றி கொண்டான். அந்த பொடியன் தான் இன்று உலக நாயகன் என கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன். அப்படி குழந்தை நட்சத்திரமாக கமலுக்கு கிடைத்த வாய்ப்பு தான் களத்தூர் கண்ணம்மா. செட்டியார் கமல்ஹாசனை பார்த்து சொன்னது 'இந்த பையன் புதுசாகவும் திறமையாகவும் இருக்கிறான். பிற்காலத்தில் பெரிய நடிகனாக வருவான்' என கூறியுள்ளார்.
அது தான் கமல்ஹாசன் சார் மீது பட்ட முதல் ஃபோகஸ் லைட்...