2009 ஆம் ஆண்டில் வெளியான 'அவதார்' படத்தின் தொடர்ச்சி கதையாக அவதார் : தி வே ஆஃப் வாட்டர் படம், 13 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெளியாகி இருக்கிறது. லண்டனில் திரையிடப்பட்ட சிறப்பு காட்சியை முன்னரே பார்த்த விமர்சகர்கள், பாசிட்டிவான விமர்சனங்களை பறக்கவிட்டனர். அவதார் : தி வே ஆஃப் வாட்டர் படம், முதல் பாகத்தை தோற்கடித்ததா என்று கேட்டால், அதற்கு முழுவதுமாக தலையை அசைக்கமுடியாது என்றே சொல்ல வேண்டும். 


அவதார் படம் வந்தால் ஐமேக்ஸ் தியேட்டரில்தான் பார்ப்பேன் என்று விடாப்படியாக இருந்தவர்கள், அப்படத்தை பார்த்து படம் இப்படி.. அப்படி..பிரமாண்டமாக இருக்கிறது.. கடல் வழியாக கதையை கடத்தியுள்ளார் ஜேம்ஸ்.. என்று கூறி வருகின்றனர். 




மோஷன் கேப்சர் எனும் தொழிநுட்பத்தை இதற்கு முன்னர் பலர் பயன்படுத்தி இருந்தாலும், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவதார் முதல் பாகத்தில் அதை அவ்வளவு நேர்த்தியாக பயன்படுத்தி கண்களுக்கு விருந்தளித்தார். அதன் பின், காலங்கள் உருண்டோட, சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட்ட்டில் வெளிவந்த அவஞ்சர்ஸ் பட்டையை கிளப்பியது.


அவதார் 2 கொடுத்த ஏமாற்றங்கள்


முதல் பாகத்தில் இருந்த அதே மோஷன் கேப்சரையும், முப்பரிமாண தொழில்நுட்பத்தையும் இராண்டாம் பாகத்திலும் அப்படியே பயன்படுத்தி இருக்கிறார் ஜேம்ஸ். முதல் பாதியில், இடம்பெற்ற முதல் 30 நிமிடம் காட்சிகள் படம் பார்க்கும் ரசிகர்களை ஏன்டா இந்த படத்துக்கு வந்தோம் என்ற அளவிற்கு யோசிக்கவைத்தது. 


மக்களை அவதார் உலகிற்கு கொண்டு செல்ல நினைத்த ஜேம்ஸ், வளவளவென்று நாம் முன்பே பார்த்து பிரமித்த காட்சிகளை அடுக்கி இருந்தார். அதன் பலன், முதல் பாதியை சற்று ட்ரிம் செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதை ரசிகர்கள் ஒரு மித்தமாக கூறினர். 


சுமாரான வில்லத்தனம்


காட்டில் வாழும் நாவிகள், கடல் உலகிற்கு சென்று தஞ்சம் அடைகின்றனர். முதல் பாகத்தில் இருந்த 
வில்லன், இந்த பாகத்தில் கதாநாயகனை கொல்லத் துடிக்கிறார். அவர் கதாபாத்திரத்தில் இன்னும் மோசமான வில்லத்தனத்தை சேர்த்து இருக்கலாம். 


தமிழ் டப்பிங்




ஆங்கிலத்தில் படம் பார்த்தவர்கள், தமிழில் உள்ள டப்பிங்கை கேலி செய்து வருகின்றனர். “எனக்கும் உன் அப்பாவிற்கும் ஏழாம் பொருத்தம் சரியில்லை” , “காட்டுச் சிரிக்கி”, “குரங்கு பயலே” போன்ற வார்த்தைகள் கூட பரவாயில்லை. அடுத்த தலைமுறையை காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் கதாநாயகனின் மகன் பெயர் நெட்டேயாம், சாகும் தருவாயில் அவர் இருக்கும் போது, “ஹே மொக்க என்ன சுட்டுடாங்க டா” என்று  பேசுகிறார். அது, சற்று காமெடியாக இருந்தாலும் இப்படிபட்ட எமோஷனல் சீனில் இந்த டயலாகை சரியாக எழுதி இருக்கலாமே ஜேம்ஸ் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். அத்துடன் அக்காட்சியை இன்னும் கொஞ்சம் ஆழமாக எடுத்திருக்க வேண்டும். 


பழைய டெம்ப்ளேட்


அசூரனில் வரும் சிவசாமி கேரக்டரை போன்று, தன் குடும்பத்தை வில்லன்களிடம் இருந்து காக்க, ஜேக் சல்லி மற்ற ஊருக்கு தஞ்சம் செல்கிறார். இறுதியில், இதுதான் என்னுடைய இடம் என்று  உறுதி கொண்டு அஞ்சா நெஞ்சனாக மாறுகிறார் கதாநாயகன்.


பின்ணனி இசை


இந்திய சினிமாவின் பயங்கர பிஜிஎம்மை கேட்டு, கெட்டு விட்டமோ என்னவோ, இப்படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை சற்று சுமாராகவே இருந்தது போல் உள்ளது.


ஸ்கோர் செய்த விஷயங்கள்




முதல் பாகத்தில் இடம்பெற்ற ஆன்மீக சிந்தனைகள், இந்த படத்திலும் மக்களிடம் நன்றாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. ஊர் மக்களால் ஒதுக்கப்பட்ட டுல்கன்களில் ( திமிங்கலம் போன்ற ஒரு கடல்வாழ் உயிரினம்) ஒன்றான பயகன் தனது வலிமையை வெளிபடுத்தி வில்லன்களை அசால்ட் செய்தது ரசிக்கும் படியாக இருந்தது. 


அதுபோல், கதாநாயகனின் மனைவி நேட்ரி, நாவி  மக்களை காக்கும் குடியாகவும் தன் குழந்தைகளுக்கு பாசம் மிக்க தாயாகவும் அசத்தியுள்ளார். இவரது கதாப்பாத்திரம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் செய்த மெனக்கெடல்களுக்கு சல்யூட்!


இது வெறும் கற்பனையே


அவதார் தி வே ஆஃப் வாட்டர், முதல் பாகம் வந்த சில ஆண்டுகளில் வந்து இருந்தால், அவதார் 1 செய்த வசூலை அவதார் 2 முறியடித்திருக்க பல வாய்ப்புகள் இருந்து இருக்கும். இது 13 ஆண்டுகள் கழித்து வந்திருப்பதால், புதியதோர் டெக்னாலஜியை பயன்படுத்தி இருக்கலாம்.



இப்படத்தில் (Augmented Reality) போன்ற தொழில்நுட்பத்தை உபயோக்கப்படுத்துவது இந்த கால கட்டத்திற்கு அசாத்தியமானது என்பது நிதர்சனமான உண்மையாகும்.  ஆனால் அடுத்த பாகம் என்று ஒன்று எடுக்கப்பட்டால் அதில், அதை பயன்படுத்தலாம். அப்படி செய்தால் படம் வேற மாறி இருந்திருக்கும். இந்த டெக்னாலஜி, இப்போதுதான் முளைத்திருக்கிறது. அப்படியிருக்கையில் அது வளர இன்னும் 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும்.