தமிழ் சினிமாவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என பல வருடங்களாக போராடி வருபவர் அருண் விஜய். ஹரி இயக்கத்தில் AV33 என்ற பெயர் வைக்கப்படாத  படத்தில் நடித்து வருகிறார்.அருண் விஜய்யின்  தங்கை பிரீத்தாவின் கணவர்தான் ஹரி  என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் அருண் விஜய் மாமா இயக்குநராக இருந்தாலும், இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதான் என்பதாலேயே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கிராமத்து கதை பின்ணணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது. முன்னதாக காரைக்குடி , ராமேஷ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று படப்பிடிப்பை நடத்தியிருந்தனர். தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக நாகை மாவட்டம் விரைந்துள்ளனர் படக்குழு. நாகை சென்ற அருண் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்ப்பு அளித்துள்ளனர் .அப்போது ரசிகர்கள் அருண் விஜயிடம்  முந்தியடித்து செல்ஃபி எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் மற்றும் படம் குறித்த அப்டேட்டை அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். மேலும் ஷூட்டிங் பிரேக்கில் தனது படக்குழுவினருடன் இணைந்து  கேரம் போர்ட் விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.




 


மேலும் நாகையில் உள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்கும் விசிட் அடித்துள்ளார். அங்கு இறை வழிபாடு செய்த அருண் விஜய், தர்காவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு கேப்ஷனாக “ ஷூட்டிங் சென்ற போது நாகூர் தர்கா சென்று வந்தேன். கடவுள் எல்லோரையும் ஆசிர்வதிக்கட்டும். எம்மதமும் சம்மதம்” என பதிவிட்டுள்ளார்.






 


 



விறு விறு கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் AV33 படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.  வில்லனாக பிரகாஷ் ராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர யோகி பாபு , ’குக் வித் கோமாளி ‘ புகழ் , ராதிகா சரத்குமார், கருடா ராம் உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர்.மேலும் 8 வருடங்களுக்கு பிறகு கங்கை அமரன் இந்த படத்தில் கௌரவ தோற்றதில்  எண்ட்ரி ஆக உள்ளார்.  கொரோனா  முதல் அலையில் வழங்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம்  இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கின. ஆனால் இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தடைப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு நடத்திக்கொள்ள மீண்டும் அரசு அனுமதி அளித்ததால் வருகிற  ஜூலை 28 ஆம் தேதி படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக அருண் விஜய்க்கு படப்பிடிப்பு தளத்தில்  காயம் ஏற்பட்டதாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  இதன் காரணமாக ஒரு மணி நேரம் படப்பிடிப்பு தளத்தில் கார்டியோ உடற்பயிற்சி செய்து ஓய்வெடுத்துக்கொண்டதாகவும். இந்த காயம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு எவ்வித பளு தூக்கும் உடற்பயிற்சியும் தன்னால் செய்ய முடியாது என வருத்தமாக தெரிவித்த அருண் விஜய்க்கு காயம் தீவிரமாக ஏற்படவே அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள நேரிட்டது.  இரண்டு மூன்று நாட்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.