தமிழ்நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கிய‘கோடநாடு கொலை, கொள்ளை’ வழக்கில் விசாரணை மீண்டும் சூடு பிடித்திருத்திருப்பதால் அதிமுக வட்டாரம் அதிர்ந்து போயிருக்கிறது. என்னையும், கழக பொறுப்பாளர்களையும் இந்த வழக்கில் சிக்க வைக்க முயற்சி நடப்பதாக கூறி சட்டப்பேரவையை 2 நாட்கள் புறக்கணித்து, அதிமுக எம்.எல்.ஏக்களோடு தர்ணா செய்த எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து மனுவையும் அளித்திருக்கிறார்.


அதோடு, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள அதிமுவை சேர்ந்த ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன.


எழும் கேள்விகள்



  • இந்த வழக்கில் தனக்கு தொடர்பு இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி ஏன் இவ்வளவு பதற்றப்படவேண்டும் ?



  • தொடர்பு இல்லாத ஒரு நபரை அதுவும் முன்னாள் முதல்வரை, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவரை அவ்வளவு எளிதில் பொய் வழக்கில் சிக்க வைத்துவிட முடியுமா ?



  • சட்டமன்றத்தையே இரண்டு நாட்கள் புறக்கணித்து தர்ணா செய்யும் அளவுக்கு அப்படி என்ன நடந்துவிட்டது..?



  • எடப்பாடி பழனிசாமியின் பெயர் இதுவரை எங்கும் சேர்க்கப்படாத நிலையில், அவருக்கு ஒரு சம்மன் கூட இதுவரை கொடுக்கப்படாதபோது, ஏன் ஆளுநர் வரை சென்று மனு அளிக்க வேண்டும் ?



  • அதிமுகவினர் ஒவ்வொருவரும் தாயாக மதிக்கக் கூடிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பத்தை அவ்வளவு சாதாரணமாக ஆட்சியில் இருந்தபோது எடப்பாடி பழனிசாமி கடந்து சென்றது எப்படி..? 


எழும் சந்தேகங்கள் :-



  • கொலை நடந்த இடத்திற்கு தடவியல் அறிஞர்கள் முதலில் சென்ற நிலையில், 2 மணி நேரம் கழித்து விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்றது ஏன் ?



  • மினி தலைமைச் செயலகமாக செயல்பட்ட கோடநாட்டில் 27 சிசிடிவி கேமராக்கள் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அங்கு சிசிடிவி கேமராக்களே இல்லை என புலானய்வு அதிகாரியும் சோலூர்மட்டம் காவல் ஆய்வாளருமான பாலசுந்தரம் நீதிமன்றத்தில் சொன்னது எதற்காக ?



  • தன்னுடைய பாதுகாப்பில் மிகவும் கவனம் செலுத்தும் ஜெயலலிதா, எப்படி கோடநாடு பங்களா பகுதிகளில் சிசிடிவி பொறுத்தாமல் இருப்பார் ? முதலமைச்சர் தங்கும் பங்களா பகுதியில் போலீசார்தான் சிசிடிவி பொறுத்தாமல் விட்டுவிடுவார்களா ?



  • கோடாநாடு பங்களா அருகே ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையிலும் சிசிடிவி கேமரா இல்லை என வங்கி அதிகாரிகள் சொல்வது ஏன் ? சாதாரணமான ஒரு பைனாஸ் நிறுவனத்திலேயே சிசிடிவி கேமராக்கள் பொறுத்தி வைக்கப்பட்டிருக்கும்போது, கோடநாடு சாலையில் இருக்கும் ஒரு வங்கிக் கிளையில் சிசிடிவியே கிடையாது என்பதை எப்படி நம்புவது ?



  • கொலை, கொள்ளை நடந்த அன்று வங்கி கிளையை குற்றவாளிகள் கடக்கும்போது முகத்தை மூடிக்கொண்டு வாருங்கள், வங்கிக்கு வெளியே சிசிடிவி இருக்கிறது என ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனராஜ் கொள்ளையர்களிடம் சொன்னதாக வெளியான தகவல் குறித்து இதுவரை விசாரிக்கப்படாதது ஏன் ?



  • கோடநாடு பங்களாவிற்கு கோத்தகிரியில் இருந்து இருந்து நேரடியாக பூமிக்கு கீழ் புதைவட கம்பிகளாக பவர் சப்ளை கொடுக்கப்பட்டிருந்த நிலையில், கோத்தகிரி மின்சார நிலையத்தில் மின்சாரம் நிறுத்தப்படாதது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்போது, பங்களாவில் மின்சாரம் நிறுத்தப்பட்டது எப்படி  ?  

  • கோடநாடு எஸ்டேட்டில் எதிர்பாராவிதமாக மின்சாரம் தடைப்பட்டால் உடனடியாக மின்சாரத்தை தருவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 2 ராட்சச மின் மோட்டார் இயங்காதது ஏன் ?



  • கோடநாடு எஸ்டேட்டில் உள்ள மின் பகிர்மான கழகத்தில் இருந்துதான் அருகே உள்ள 5 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கபட்டு வரும் நிலையில், எஸ்டேட்டின் உள்ளே இருந்த மின்பகிர்மான கழகத்தின் மின்மாற்றியில் மின்சாரத்தை துண்டித்தபோது அருகே இருந்த கிராமங்களுக்கும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது என்பதையெல்லாம்  விசாரிக்காமல் விட்டது ஏன்?



  • 8 ஆம் நம்பர் கேட்டிற்கு முதலில் சென்ற காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், கொலை நடந்த 10 எண் நம்பர் கேட்டுக்கு ஏன் 5 மணி நேரம் கழித்து சென்றார் ?



  • கொலை, கொள்ளை நடந்த இடத்தில் மார்க் செய்யப்பட்டு, காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் ஏன் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை..?



  • குற்றச்செயல் நடைபெற்ற இட அமைப்பின் வரைபடம் (Topo Sketch) இந்த வழக்கில் தயாரிக்கப்பட்டும் அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாதது ஏன் ?



  • கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும் அங்கு பராமரிக்கப்படும் பொதுநாட்குறிப்பில் ஏன் இந்த தகவல் பதிவு செய்யாமல் தவிர்க்கப்பட்டது..?



  • கோடநாடு பங்களா அருகே கைப்பற்ற செல்போன் குறித்து விசாரிக்கப்படாததும், தடவியல்துறை ஆய்வுக்கும் அனுப்பபடாதது ஏன் ?



  • சம்பவம் குறித்து காயம்பட்ட வாட்ஸ்மேனிடம் புகார் வாங்கும்போது அவரது கையெழுத்தோ அல்லது கைரேகையோ வாங்காதது எதற்காக ? முறையாக புகார் கொடுக்க வேண்டிய கோடநாடு எஸ்டேட் மேலாளர் எந்த புகாரும் காவல்துறையில் அளிக்காதது ஏன் ?



  • கூடலூர் சோதனைச் சாவடியில் குற்றவாளிகளையும் அவர்களது வாகனத்தையும் பிடித்து காவல்நிலையத்தில் பல நேரம் வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில், யார் உத்தரவு பெயர் அவர்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டனர் ?



  • வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருக்கும் ரவி, இந்த வழக்கில் போலீசார் மேல் விசாரணை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க என்ன காரணம்..? சாதாரண மனிதராக இருக்கும் அவருக்கு லட்சம், கோடிகளில் கட்டணம் பெரும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜரானது எப்படி ? உயர்நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டதும் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் அளவுக்கு அவருக்கு பின்னணியில் இருப்பது யார்?



  • ஜெயலலிதாவோடு கோடநாடு பங்களாவில் வசித்தவரும் அவரது நெருங்கிய தோழியான சசிகலா-விடமும், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடமும் விசாரணை மேற்கொள்ளாதது ஏன் ? அவர்களுக்குதானே அங்கு உள்ள அறைகளில் என்னென்ன இருந்தன, என்ன கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன என்பது தெரியும் ?


என்பது போன்ற இதுவரை விடை கிடைக்காத பல்வேறு சந்தேகங்கள் இந்த வழக்கில் இருக்கின்றன. இப்படியான நிலையில், இந்த வழக்கில் இதுபோன்ற சந்தேகங்களை போலீசார் முறையாக விசாரித்தாலே முக்கிய குற்றவாளி சிக்கிவிடுவார் என்கின்றனர் முன்னாள் காவல்துறை அதிகாரிகள்.



வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சயான்


'கோடநாடு வழக்கில் எங்களுக்கு புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன’ என தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தகவல் மிக முக்கியமாக பார்க்கப்படுவதால், விரைவில் சில முக்கியப்புள்ளிகளுக்கு காவல்துறை சம்மன் அளித்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது


இந்த கொலையும், கொள்ளையும் ஏதோ குப்பன் வீட்டிலேயோ அல்லது சுப்பன் வீட்டிலேயோ நடைபெற்றுவிடவில்லை. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமாக இருந்தவருமான ஜெயலலிதா தங்கும் வீட்டில் நடந்திருக்கிறது. எனவே, இந்த வழக்கில் விடுபட்ட தகவல்களை, சந்தேகங்களையெல்லாம் முறையாக விசாரித்து, இந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளியை கண்டுபிடித்து, இந்த வழக்கின்உண்மைத்தன்மையை மக்களுக்கு சொல்லவேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது.