உள்நாட்டிலும், சர்வேத அரங்கங்களிலும் பல்வேறு வெற்றிகளைக் குவித்த திரைப்படம் தான் ஜெய் பீம். இத்திரைப்படத்திற்கு  தற்போது பீஜிங் சர்வதேச திரைப்பட விழாவிலும் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இப்போது கிடைத்துள்ளது மக்கள் அங்கீகாரம்.


சூர்யா, மணிகண்டன், லிஜோமோல், பிரகாஷ் ராஜ் நடிப்பில் த.செ. ஞானவேல் இயக்கியிய படம் ஜெய் பீம். ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில் உருவான இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. 


முதனை கிராமத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவரை காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் அடித்து கொன்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான ஜெய் பீம் சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. ராஜாக்கண்ணு மரணத்திற்கு நீதி பெற்று தந்த நீதியரசர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.


அதனை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூ டியூப் சேனலில் ஜெய்பீம் திரைப்படம் தொடர்பான வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. படத்தின் காட்சிகளும், இயக்குநர் ஞானவேலின் நேர்காணலும் அதில் இடம்பெற்றது. தமிழ் சினிமாவுக்கும், ஜெய்பீம் படக்குழுவுக்கும் கிடைத்த அங்கீகாரம் என பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர். 


இந்நிலையில், 12வது தாதாசாஹப் பல்கே திரைப்பட விருதுகளில் ஜெய் பீம் திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றது. திரைத்துறையில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு அளிக்கப்படும் இந்த விருது நிகழ்ச்சியில், ஜெய் பீம் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருதை ராஜாக்கண்ணு கதாப்பாத்திரத்தில் நடித்த மணிகண்டனுக்கும் அறிவிக்கப்பட்டது.


முன்னதாக, ஐஎம்டிபி இணையதளத்தில் ஜெய் பீம் திரைப்படம் முதலிடம் பிடித்து புதிய சாதனையைப் படைத்தது. ஐஎம்டிபி உலகளவில் புகழ் பெற்ற இணையங்களில் ஒன்றாகும். இதில், ஜெய் பீம் படம் 53,000 வாக்குகள் பெற்று, 9.6 புள்ளிகளுடன் முதல் இடம் பெற்றது. 


இப்படி உள்நாட்டிலும், சர்வேத அரங்கங்களிலும் பல்வேறு வெற்றிகளைக் குவித்த திரைப்படம் தான் ஜெய் பீம். இத்திரைப்படத்திற்கு  தற்போது பீஜிங் சர்வதேச திரைப்பட விழாவிலும் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அது மக்கள் அங்கீகாரம்.






ஜெய்பீம் படத்தைப் பார்த்த சீன ரசிகர்கள், எனக்கு இந்தப் படத்தைப் பார்த்து மிகுந்த ஆச்சர்யம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டவரான எனக்கே அவர்கள் சந்தித்த இன்னல்களை உணர முடிந்தது என்று ஒருவர் கூறினார். இன்னொரு பெண்மணி நான் கண்ணீருடன் படத்தைப் பார்த்தேன். நெகிழ்ந்து போனேன் என்று கூறினார். படத்தின் பாடல் கதையோட்டத்தை தாங்கிச் சென்றது என்று ஒருவர் கூறினார். இன்னொரு இளைஞர், இந்தக் கதை எனக்கு மன வலியை தந்துவிட்டது என்றார். தனது கவுரவத்தைக் காக்க நஷ்ட ஈடை மறுத்துச் சென்ற செங்கேணியே என் மனதைக் கவர்ந்தார் என்றொரு பெண் கூறினார்.