விசாரணை படத்தின் ஷூட்டிங்கின் போது 6 ஆண்டுகளாக தான் பட்ட ஒரு கஷ்டத்துக்கு முடிவு கிடைத்த நினைவுகளை நடிகர் தினேஷ் பகிர்ந்துள்ளார். 


ஈ, எவனோ ஒருவன், ஆடுகளம், மௌன குரு உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர் தினேஷ். இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்னும் படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் தினேஷூடன் அட்டகத்தி அடைமொழியாக சேர்ந்து கொண்டது. இதனைத் தொடர்ந்து குக்கூ, திருடன் போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், விசாரணை, ஒருநாள் கூத்து, கபாலி, அண்ணனுக்கு ஜே, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, நானும் சிங்கிள் தான் என ஏகப்பட்ட படங்களில் நடித்தார். 


இதில் விசாரணை படம்  தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வரும் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவானதாகும்.  கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளியான இப்படம் சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. விசாரணை படத்தில்  அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.  ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்கு அனுப்ப இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது. 


தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை விசாரணை படம் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தினேஷ், விசாரணை படத்தால் தனக்கு நேர்ந்த நல்லது குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர் தனது பதிலில், “சினிமாவை பொறுத்தவரை வெற்றிமாறன், பா.ரஞ்சித் இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள். விசாரணை படம் ஒரு வலி தான். நான் சிக்ஸ் பேக் வைத்துக் கொண்டு சாலிகிராமத்தில் இருந்த வெற்றிமாறன் அலுவலகத்திற்கு சென்று வாய்ப்பு கேட்டேன். அப்போது நிறைய தலைமுடி எனக்கு உண்டு. அதை பார்த்து விட்டு இதை கட் பண்ண வேண்டாம் என சொன்னார். அந்த சமயம் எனக்கு முதுகுவலி இருந்தது. 


சிக்ஸ் பேக் முயற்சிக்காக நானே ஒர்க் அவுட் பண்ணியதால் வந்தது அது. இது 2008 ஆம் ஆண்டு நடந்தது. அதன்பிறகு விசாரணை படத்தின் ஷூட்டிங் 2014 ஆம் ஆண்டு நடந்தது. அந்த படத்துக்காக தலைகீழாக கட்டி அடிப்பது போல காட்சி எடுக்கப்பட்டது. அப்போது சார்..சார் என கத்தினேன். ஷூட்டிங்கில் இருந்த அனைவரும் பதறிவிட்டனர். என்னவென்று வெற்றிமாறன் விசாரித்தார். இத்தனை வருடமாக இருந்த முதுகுவலி சரியாகி விட்டது என சொன்னேன்’ என கலகலப்பாக தெரிவித்துள்ளார். மேலும் விசாரணைக்குப் பின் ஏன் இதே மாதிரி படங்கள் பண்ணவில்லை என கேட்டார்கள். ஆனால் அதற்கேற்ற மாதிரி நிலைமை அமையவில்லை எனவும் தினேஷ் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.