பழம்பெரும் நடிகை வி.வசந்தா உடல்நலக்குறைவால்  உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சமீபகாலமாக திரையுலகில் தொடரும் இழப்புகள் பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் தீராத துக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. சினிமாவையும் மக்களையும் எந்தளவுக்கு பிரித்து பார்க்க முடியாதோ, அதே அளவுக்கு திரைத்துறையில் ஏற்படும் இழப்புகளை எளிதாக கடந்து போக முடியாது. அதனால் தான் பிரபலங்கள் மரணமடையும் போது தங்கள் இரங்கல்களை நேரிலோ அல்லது சமூக வலைத்தளங்கள் வழியாகவோ ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 


இப்படியான நிலையில் நடப்பாண்டில் 3 பேரின் மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா, மற்றும் இயக்குநர் டிபி கஜேந்திரன் மரணங்கள் இன்றளவும் பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. சமீபத்தில் இவர்களுக்கு இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. இப்படியான நிலையில் திரையுலகில் மீண்டும் ஒரு பழம்பெரும் நடிகை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


எம்.கே.தியாகராஜ பாகவதர் நாடக குழுவில் இடம் பெற்று பழம் சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகை வி.வசந்தா. இரவும் பகலும் என்ற படத்தில் நடிகர் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் புகழ் பெற்றார். தொடர்ந்து அசோகனுக்கு ஜோடியாக கார்த்திகை தீபம் படத்தில் நடித்தார். 


அதேபோல் ரஜினி நடித்த ராணுவ வீரன் படத்தில் அவருக்கு அம்மாவாகவும், மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி அம்மாவாகவும் நடித்த வசந்தா, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதனிடையே 82 வயதான அவர் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.


இதற்காக சிகிச்சை எடுத்து வந்த வசந்தா சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 3.30 மணியளவில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெறுகிறது. வசந்தாவின் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.