மாநாடு திரைப்படத்தின் வெற்றி சிம்புவிற்கு மட்டுமல்ல அவரது நலன் விரும்பிகள் , ரசிகர்கள் என அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் , வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம்  50 கோடிக்கும் மேலாக வசூல் வேட்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் கூட சமீபத்தில் நடைப்பெற்றது. ஷூட்டிங் நிறைவடைந்த பொழுது , சிம்பு படக்குழுவினருக்கு கைக்கடிகாரங்களை பரிசளித்தாராம். சமூக வலைத்தளங்களில் தனது படம்  குறித்த அப்டேட்டை வெளியிட்டு வரும் சிம்பு தற்போது உருக்கமாக தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளார் அதில் “என் பாசத்திற்குரிய அனைவருக்கும். வணக்கம்.

Continues below advertisement

நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம். பலர் வாழ்க்கையின் எல்லையை தொட்டு மீண்டிருப்பர். இழப்பையும், நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்திருக்கிறோம்.இறைவனின் பெருங்கருணையால் இந்த புதிய வருடத்தை காணவிருக்கிறோம். தனிப்பட்ட முறையில் மாநாடு படத்தை மிகப்பெரிய வெற்றியாக பரிசளித்த ஆண்டு இவ்வாண்டு.மிக பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021 ஆண்டை முடிக்கிறேன். 2022 ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும் உங்களுக்கும் அமைய வேண்டிக்கொள்கிறேன்.

என்னை எப்போதும் உங்களில் ஒருவனாக பார்த்துக்கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரையுலக சொந்தங்களுக்கும், என்றென்றும் எனக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடக பெருமக்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நலமே வாழ்க. நீங்க இல்லாம நான் இல்ல. என்றும் அன்புடன் உங்கள் சிலம்பரசன் TR “ என பதிவிட்டுள்ளார்.

சிம்பு தற்போது முத்து என்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் , கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். வெந்து தணிந்தது காடு என பெயர் வைக்கப்பட்ட அந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி பலரின் வரவேற்பை பெற்றது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தக் கூட்டணி விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றிய நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா “ திரைப்படத்தின் இயக்குநருடன் “கொரோனா குமார்” திரைப்படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு. இந்த படத்தில் சிம்பு வட சென்னை இளைஞராக வலம் வருகிறார். சுமார் மூஞ்சு குமார் கதாபாத்திரத்தின் நீட்சியாகத்தான் சிம்புவின் புதிய படத்தின் கதாபாத்திரம் அமையவுள்ளது.