நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘இமைக்கா நொடிகள்’ படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
கவனிக்க வைத்த படம்
டிமாண்டி காலனி படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்ற இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படமாக இமைக்கா நொடிகள் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அதர்வா, ராஷிகண்ணா, நயன்தாரா, விஜய் சேதுபதி, இயக்குநர் அனுராக் காஷ்யப், பேபி மானஸ்வி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழில் அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா, பேபி மானஸ்வி ஆகியோருக்கு முதல் படமாகும் என்பதால் மிகப்பெரிய கவனத்தை பெற்றது.
சிலிர்க்க வைத்த கதை
சீரியல் க்ரைம் த்ரில்லர் கதைகள் தமிழில் எப்போவாவது வெளிவரும். இது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. அப்படியான ஜானரில் வெளியானது இமைக்கா நொடிகள். ‘பெங்களூரு நகரில் அடுத்தடுத்து விஐபிக்கள் அனுராக் காஷ்யப்பால் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். இதனை விசாரிக்க சிபிஐ அதிகாரியான நயன் நியமிக்கப்படுகிறார். அவரின் விசாரணையில் குற்றவாளியை நெருங்கும் போதெல்லாம் பின்னடைவை சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் அதர்வா தான் குற்றவாளி என அனுராக் நம்ப வைக்கிறார். இதற்கிடையில் காதலி ராஷிகண்ணா கடத்தப்படுவதால் களத்தில் இறங்கும் அதர்வாவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருக்கிறது. நயன்தாராவுக்கும் இந்த குற்றத்தில் பங்கிருக்கிறது என தெரிய வருகிறது. இறுதியில் உண்மையான குற்றவாளி யார்?.. இந்த கொலைகளுக்கான காரணம் என்ன? என்பதே இப்படத்தின் கதையாகும்.
போதும் போதும் என சொல்லும் அளவுக்கு ட்விஸ்ட்கள் வைத்து படம் பார்ப்பவர்களை சிலிர்க்க வைத்து டயர்டாக வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள்.
ஆக்ஷனில் மிரட்டிய பிரபலங்கள்
முதலில் அனுராக் ஆக்ஷனில் மிரட்ட, கதை அப்படியே நயன்தாரா பக்கம் திரும்பும். இரண்டாம் பாதியில் அதர்வா ஆக்ஷன் ஹீரோவாக மாற கிட்டதட்ட 3 மணி நேரம் ‘இங்க என்ன நடக்குது?’ என கேள்வியெழுப்பும் அளவுக்கு 3 பேரும் அசத்தியிருந்தார்கள். நடுவே ராஷிக் கண்ணாவுடனான அதர்வா காதல், இரண்டாம் பாதியில் வரும் விஜய் சேதுபதி - நயன் காதல் என படம் பார்ப்பவர்களை முழு திருப்திப்படுத்தியிருப்பார்கள். தமிழுக்குப் புதுமுகமான அனுராக் காஷ்யப் வில்லனாக தூள் கிளப்பியிருந்தார். மேலும் நடிகர் கொட்டாச்சியின் மகளான பேபி மானஸ்வி ஒரு காட்சியில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ஹிப்ஹாப் தமிழா இசையில் பாடல்களும் ஓரளவு வரவேற்பை பெற்ற, படத்தின் நீளத்தை மட்டும் சற்று குறைத்திருந்தால் இமைக்கா நொடிகள், ‘இமைக்காமல்’ ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கும்.