கோலிவுட்டின் ஹார்ட் த்ரோப் அதர்வா இன்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 80'ஸ், 90'ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் நடிகராக திகழந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா ஒரு பைலட்டாக வேண்டும் என்றே விரும்பியுள்ளார். ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு நடிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டு தற்செயலாக நடிகரானவர். தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தையும் மிகவும் நேர்த்தியாகவும் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 


 



முதல் படமே அடையாளம்: 



21 வயதில் நடிகராக சினிமா துறையில் அடியெடுத்து வைத்த அதர்வா நடித்த முதல் திரைப்படம் 'பானா காத்தாடி'. தந்தையின் ஆசியோடு பள்ளி மாணவனாக களத்தில் இறங்கினார். தந்தை முரளி இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து மகனின் நடிப்பை நேரடியாக கண்டு ரசித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக படம் வெளியான ஒரு மாத இடைவெளியில் மாரடைப்பு காரணமாக காலமானார். சமந்தாவுடன் ஜோடி சேர்ந்த முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் அதர்வா. 


படத்திற்கு படம் வித்தியாசம்:


மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனாக 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', அப்பாவி கொத்தடிமையாக 'பரதேசி', தடகள வீரராக 'ஈட்டி', காவல்துறை அதிகாரியாக '100 ', கபடி வீரராக 'பட்டத்து அரசன்' என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தை பிடித்தார்.  


 



கடுமையான உழைப்பு: 


படத்திற்காக கடுமையாக உழைக்க கூடிய அதர்வா தனது அழகான தோற்றத்தை பரதேசி படத்திற்காக ஹேர் ஸ்டைல், லுக் என அனைத்தயும் மாற்றினார். அதே போல இரும்பு குதிரை படத்திற்காக சிக்ஸ் பேக் ஏபிஎஸ்ஸை தீவிரமான பயிற்சி மூலம் கொண்டுவந்தார். அவரின் உடற்தகுதி பார்த்து அனைவரையும் திகைக்க வைத்தார். இப்படி நடிப்பிற்காக பல வகையிலும் தன்னை தயார் படுத்தி கொண்ட அதர்வா ஸ்டண்ட் நடன இயக்குனர்களிடம் தீவிர பயிற்சிகள் மேற்கொண்டு உடல் ரீதியாகும் தன்னை சண்டை காட்சிகளுக்கு தயார் படுத்தி கொண்டார். தனது தந்தையின் முன்னிலையில் திரை வாழ்க்கையை துவங்கி இன்று அவரின் ஆசீர்வாதத்தோடு முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார். 


வெப் தொடரில் அதர்வா:


நடிகர் அதர்வா வெப் தொடர்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் 'மத்தகம்'   என்ற வெப் தொடரில் நடித்துள்ளார் அதர்வா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என எட்டு மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. இது தவிர கைவசம் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.


இந்த பிறந்தநாள் நடிகர் அதர்வாவுக்கு பல முன்னேற்றங்களையும், வெற்றிகளையும், அதிசயங்களும் நிறைந்த ஒரு ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.