பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இந்திய குடிமகன் என்பதற்கான சான்றிதழை பெற்றுவிட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அக்‌ஷய் குமார்:


பஞ்சாபில் பிறந்து ராஜிவ் ஹரி ஓம் பாட்டியா என்ற இயற்பெயர் கொண்ட அக்‌ஷய் குமார், கடந்த 30 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தார். பல்வேறு தேசப்பற்று மொழிகளிலும் நடித்துள்ளார். 55 வயதான அக்‌ஷய் குமார் நடிப்பில் அண்மையில் 'ஒஎம்ஜி 2' என்ற பெயரிலான திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் சிவபெருமானின் தூதுவராக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.


கனடா குடியுரிமை:


இதனிடையே, அக்‌ஷய் குமார் கனடா நாட்டின் குடியுரிமையை கடந்த 2000ம் ஆண்டில் பெற்றார். அதற்குப் பிறகு இந்திய நாட்டின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் இந்தியக் குடியுரிமை இல்லாதவர் என சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அது சார்ந்து அவர் மீது ஒரு தரப்பினர் பல்வேறு கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டு வந்தனர்.  அவரை அக்ஷய்குமார் என அழைத்ததை விட கனடியன் குமார் என்றுதான் ரசிகர்கள் அதிகமாகக் கிண்டலடித்தார்கள்.


நான் இப்ப ”இந்தியன்” தான்:


இந்நிலையில்  இந்தியக் குடியுரிமையைப் பெற்றுவிட்டதாக அக்ஷய்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அந்த பதிவில் “இதயமும், குடியுரிமையும் இந்தியன்... இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள், ஜெய்ஹிந்த்," எனக் குறிப்பிட்டுள்ளார். அதோடு, இந்தியக் குடியுரிமை பெற்றதற்கான சான்றிதழையும் பதிவிட்டுள்ளார். அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






 


பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இந்தியாவின் மீதான தனது காதலை நிரூபிக்க தனது கனடா நாட்டு குடியுரிமையை துறக்க உள்ளதாகவும், இந்திய குடியுரிமையை பெற உள்ளதாகவும் ஏற்கனவே வெளிப்படையாக பேசி இருந்தார். இதனிடையே, இந்திய பாஸ்போர்ட் வேண்டி அவர் கடந்த 2019-ல் விண்ணப்பித்து இருந்ததாக தகவல் வெளியானது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அதை பெறுவதில் காலதாமதமானது எனவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


வெளிநாட்டு குடியுரிமை எதற்கு?


கனடா குடியுரிமை தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அக்‌ஷய் குமார் “2000ம் ஆண்டு தொடக்க காலகட்டங்களில் எனது  நடிப்பில் வெளியான படங்கள் சரியாக ஓடவில்லை. இதன் காரணமாக தனது நண்பர் மூலம் வேலைக்காக கனடா சென்றேன். தொடர்ந்து அங்கேயே இருப்பதற்காக அந்நாட்டு குடியுரிமையை பெற்றேன். ஆனால், அந்த வேலைக்கு செல்வதற்கு முன்பாக நான் நடித்து முடித்த இரண்டு படங்கள் வெளியாகி, இரண்டுமே வெற்றி பெற்றன. அதனால் தொடர்ந்து பட வாய்ப்புகளும் எனக்கு கிடைத்ததால் மீண்டும் இந்தியாவிற்கு வந்தேன். ஆனால், அந்த பாஸ்போர்ட் இப்படி பிரச்னையாகும் என நினைக்கவில்லை” என குறிப்பிட்டு இருந்தார்.