செயற்கை நுண்ணறிவு திறனுக்கு எதிராக ஹாலிவுட் நடிகர்களும் ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், அந்த திரையுலகமே ஸ்தம்பித்துள்ளது. நியூயார்க் நகரின் முக்கிய வீதிகளில் இறங்கி நடிகர், நடிகைகள் போராட தொடங்கியுள்ளனர்.
ஹாலிவுட் திரையுலகம்:
கோலிவுட், டோலிவுட் அல்லாமல் உலக அளவில் பெரும் வியாபாரத்தை கொண்டது ஹாலிவுட் திரையுலகம். உள்ளூரில் சுமாரான வரவேற்பையே பெற்ற பல ஹலிவுட் படங்கள் கூட, சர்வதேச சந்தையில் வசூலில் சக்கை போடு போட்டுள்ளன. சாதாரண வில்லன்கள் மற்றும் கதைகளை தாண்டி, கற்பனைக்கு எட்டாத கதைக்களம், காணக்கிடைக்காத பிரமாண்ட காட்சி அமைப்புகள், பிரமிப்பான ஆக்ஷன்கள் என அனைத்திலும் பிரமாண்டத்தை புகுத்தி, உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் கொண்டு, திரையுலகின் வசூல் சாம்ராஜ்ஜியமாக விளங்கி வருகிறது ஹாலிவுட். இந்த நிலையில், கடந்த 63 ஆண்டுகளாக இல்லாத வகையில், முதல் முறையாக மொத்த ஹாலிவுட் திரையுலகமே மூடுவிழா காணும் சூழல் ஏற்பட்டுள்ளது.
6 மாத கால போராட்டம்:
ரசிகர்களின் புதுப்புது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான, கதைக்களங்களை உருவாக்கும் ஹாலிவுட் கதாசிரியர்கள் தங்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இனி கதாசிரியர்களே தேவையில்லை என்ற நோக்கில், தயாரிப்பு நிறுவனங்கள் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திரையுலகில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். உதாரணமாக, அண்மையில் மர்வெல் நிறுவனம் வெளியிட்ட சீக்ரெட் இன்வேசியன் சீரிஸின் தொடக்கத்தில் வரும், காமிக் வரைபடங்கள் கூட AI மூலமாக தான் வரையப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் தான், கடந்த 6 மாதங்களாக கதாசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரிக்கை என்ன?
சரியான ஊதியம் வழங்கப்பட வேண்டும், வேலை நேரத்தை உறுதி செய்ய வேண்டும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கதாசிரியர்களுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடாது, காப்புரிமை ஒப்பந்தத்தில் தங்களுக்கான சரியான அங்கீகாரம் மற்றும் உரிமைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. கடந்த 6 மாதங்களாக கதாசிரியர்கள் அமைப்பான ரைட்டர்ஸ் கில்ட் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், தயாரிப்பு நிறுவனங்கள் எந்த வித முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருந்தனர். இதனிடையே, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் கதாசிரியர்களுக்கு சாதகமான எந்த முடிகளும் எட்டப்படவில்லை.
களத்திற்கு வந்த நடிகர்கள்:
இந்த நிலையில் தான், சாக் ஆஃப்ட்ரா என அழைக்கப்படும் ஹாலிவுட் நடிகர்கள் சங்கமும், கதாசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த சங்கத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி பல்வேறு சிறிய சங்கங்களும் கூட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பல்வேறு பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் முன்னிலையில் குவிந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி நடிகர்கள் முழக்கங்கள் எழுப்பினர். குறிப்பாக டிஸ்னி, நெட்ஃபிளிக்ஸ், வார்னர் ப்ரோஸ், டிஸ்கவரி, அமேசான், பாரமவுண்ட் மற்றும் என்பிசியு யூனிவர்சல் உள்ளிட்ட அலுவலகங்களின் முன்பு போராட்டக்காரர்கள் குவிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
ஹாலிவுட் மூடிவிழா..!
கடந்த 63 ஆண்டுகளில் நிகழாத அளவிலான இந்த மாபெரும் போராட்டத்தால், ஹாலிவுட் திரையுலகமே மூடுவிழா காணும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ரைட்டர்ஸ் கில்ட் போராட்டத்தால் கதைகளில் எந்த ஒரு மாற்றத்தையும், திருத்தங்களையும் செய்ய முடியாமல் பல்வேறு படங்களின் பணிகள் நெருக்கடிக்கு ஆளாகின. தற்போது நடிகர்களும் ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் குதித்துள்ளதால், படப்பிடிப்பு முழுமையாக முடங்கத் தொடங்கியுள்ளன. திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஆன்லைன் வெப் சீரிஸ்கள் உள்ளிட்ட எந்த ஒரு திரைப்படம் மற்றும் சீரிஸுக்குமான படபிடிப்பும் இனி நடைபெறாது. இதனால், தொலைக்காட்சி தொடர்களின் ஒளிபரப்பு கூட பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நோ மோர் சூப்பர் ஹீரோஸ்:
இதில் பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளது டிஸ்னி, வார்னர் ப்ரோஸ் போன்ற சூப்பர் ஹீரோக்கள் படங்களை தயாரிக்கும் நிறுவனங்களாக தான் இருக்கும். டிஸ்னி நிறுவனம் அடுத்தடுத்து பல்வேறு படங்களுக்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில், அந்த பணிகள் அனைத்தும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. பல கோடிகளை கொட்டி அமைத்த ஷெட்கள் அனைத்தையும் கலைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டெட்பூல் உள்ளிட்ட படத்திற்காக போடப்பட்ட பல ஷெட்களுக்கும் அதே நிலை தான். டிசி நிறுவனம் தனது புதிய படங்களுக்கான எந்த பணிகளையுமே தொடங்க முடியாத சூழலில் உள்ளது. இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் பல்வேறு சூப்பர் ஹீரோ படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ல்ளது.
தீர்வு கிடைக்குமா?
இந்த போராட்டங்கள் முடிவடையும் வரை, இனி எந்தவொரு ஹாலிவுட் படம் தொடர்பான அப்டேட்டோ, பிரீமியர் காட்சிகள் திரையிடலோ நடைபெறாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான ஆஸ்கர் விருதாக கருதப்படும், எம்மி விருது வழங்கும் நிகழ்ச்சியும் திட்டமிட்டபடி நடைபெறுவது சந்தேகம் என கூறப்படுகிறது. அதேநேரம், நடிகர்களும் போராட்டத்தில் குதித்தை தொடர்ந்து, பெருநிறுவனங்கள் அடுத்த ஒரு வாரத்திற்குள் சமாதான பேச்சுவார்த்தை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க அதிகப்படியான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.