இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு என்று இருக்கும் ரசிகர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமல்ல. அவர்களை ஒரு வகையான கல்ட் க்ரூப் எனலாம், அவரைப் பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பகிர்வது முதல் அவரது பாடல்களை அதிதீவிர அறுவை சிகிச்சை செய்து அதில் இருக்கும் ராகம், உணர்வு, அந்தப் பாடலின் தனித்துவம் என சிலாகிப்பது வரை அவர்களை ஒருவகை பக்தர்கள் முகாம் என வகைப்படுத்தலாம். அப்படியானவர்களின் தாக்கத்தால் தொலைக்காட்சிகள் பல்வேறு இசை சார்ந்த நிகழ்ச்சிகளை நிகழ்த்தத் தொடங்கின. அப்படி உருவானதுதான் மனதோடு மனோ நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் ஒருமுறை பங்கேற்ற இயக்குநர் ரமேஷ் கண்ணா ஒரு அதிதீவிர இளையராஜா ரசிகர். அவரது இளையராஜா உடனான பயணம், இசையின் மீதான ஆர்வத்தின் தொடக்கம் மற்றும் திரை அனுபவங்கள் குறித்து நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.
”நான் துணை இயக்குநராக 100 படங்கள் வரை உழைத்திருக்கிறேன். 60 படங்கள் வொர்க் செய்திருக்கிறேன். 60 படங்கள் வரை நடித்திருக்கிறேன். என் அண்ணன் மூலமாதான் எனக்கு பாடல்களை உற்று கேட்டு ரசிக்கும் ஆர்வம் உண்டாச்சு. ராஜ் கபூர் படத்தின் பாடல்களை அப்படிச் சிலாகிப்பார். நமக்கு இந்தி புரியலை என்றாலும் அந்தப் பாடல்களை கேட்கப் பிடிக்கும். வட இந்தியர்கள் பாடல்களைச் சிலாகிப்பதில் வேற லெவல் எனலாம். திரையில் பாடல் தோன்றினால் அப்படியே சில்லறையை பாடல்களுக்காக வாரி இரைப்பார்கள்”
“ஆண்பாவம் படத்தில் அசோசியேட் டைரக்டராக ஒர்க் செய்தேன்.இளையராஜாதான் அந்தப் படத்துக்கு இசையமைப்பாளர். ‘காதல் கசக்குதையா’ பாடல் கம்போசிங் நடக்கும் சமயம் அவரது அறையில் பாண்டியராஜன் சார் உட்கார்ந்திருந்தார். அவருடன் நானும் போய் உட்கார்ந்தேன்.அந்த பாடலில் ‘பியு சின்னப்பா காலத்திலே’ என ஒரு வரி வரும் உடனே நான் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ”னு எடுத்துவிட்டேன்.. ‘எம்.எஸ்.வி காலத்திலே’ என ஒரு வரி வரும் அதற்கும் ஒரு பாடலைச் சொன்னேன். நான் பேசுவதைப் பார்த்து பாண்டியராஜன் சாருக்கு கடுப்பு. கம்பொசிங்கை கெடுத்துவிடுவேன் என்கிற பயம். ஆனால் ராஜா சார் என்னைப் பார்த்துச் சிரித்தார். அதிலிருந்து பாண்டியராஜன் கம்போசிங்குக்கு உட்கார்ந்தால் அவருடன் உட்கார எனக்கும் அனுமதி கிடைத்தது. அப்படி கம்போசிங்குக்கு உட்கார்ந்து கிடைத்த அருமையான பாடல்களில் ஒன்றுதான் ‘அடி ஆத்தாடி...’ என் படத்துக்குதான் கம்போஸ் செய்கிறார் என நினைத்தால் என் கண் முன்னாடியே அந்த ரெக்கார்டை எடுத்து தன்னுடைய உதவியாளரிடம் கொடுத்துவிட்டு..’பாட்டு வந்துருச்சுனு சொல்லி இதை பாரதிராஜா கிட்ட கொடு’ன்னு சொன்னார். என் கண் முன்னாடியே அந்தப் பாடல் ‘கடலோரக் கவிதைகள்’ படத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. என்றார்.