தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மேக்ஓவர் கலைஞராக இருந்து வருகிறார் அஸ்மிதா. தனது 13 வயதில் மாடலிங் துறையில் நுழைந்த அஸ்மிதா மேக் - அப் துறையிலும் தனது திறமையை நிரூபிக்க முடிவெடுத்து அதிலும் சிறந்து விளங்கினார். ‘அஸ்மிதா மேக்ஓவர் ஆர்டிஸ்ட்ரி’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பிரைடல் மேக் - அப் தொழில் சமீப காலமாக மிகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதை மிகவும் சிறப்பாக செய்து வரும் அஸ்மிதா, தன் திருமண வாழ்க்கை குறித்து சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அஸ்மிதா மற்றும் அவரின் கணவர் விஷ்ணு இருவரும் மிகவும் பிரபலமான யூடியூபர்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘கங்கனா’ ஆல்பம் 4 மில்லியன் வியூஸைக் கடந்து மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்த நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டபோது தங்களுக்கு இடையேயான உறவு மற்றும் பிரிவு குறித்து தெளிவாக விளக்கம் அளித்து இருந்தனர்.
திருமணத்துக்குப் பிறகு முடிவு செய்யப்பட்ட இந்த ஆல்பம், கொரோனா காரணமாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. மேலும் இருவரும் நடித்த இந்த ஆல்பம் வெளியாவதற்கு முன்னரே அவர்களின் விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் விஷ்ணு. அது வெறும் ப்ரோமோஷன் ஸ்டண்ட் என்ற விமர்சனங்கள் பரவலாக பேசப்பட்டன.
ஆல்பத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்திலேயே இருவருக்கும் இடையே அன்பு இருந்தாலும் புரிதல் இல்லாமல் போனது. தொடர்ந்து விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளார்கள். ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்து கொள்ளாமல்அவரவர் பாதையில் பயணித்து வந்தார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்கள் விவாகரத்து பெற்ற நிலையில், அதன் பின் தனிமை இவர்களை நிறைய யோசிக்க வைத்துள்ளது. காலம் காயங்களை ஆற்றத் தொடங்கியுள்ளது. இதனை இருவரும் உணரத் தொடங்கியுள்ளனர்.
மீண்டும் ‘கங்கனா’ பாடலுக்காக இருவரும் மீண்டும் இணைந்த போது மிகவும் சாதாரணமாக பேசிக்கொண்டுள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்ததால் சற்று பதட்டத்துடன் இருந்தாலும் எப்படியோ ஆல்பத்தை முடித்துள்ளார்கள். ஆல்பத்தில் அழும் காட்சியில் நடித்து விட்டு அப்படியே ஓடி வந்து "சட்டமோ பேப்பரோ நம்மை பிரிக்க முடியாது, நான் உன்னுடன் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என இருவரும் சொல்லிக் கொண்டுள்ளனர். பிரிந்த இதயங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன.
இந்நிலையில், “விவாகரத்து என்பது சினிமாவில் வருவது போல அவ்வளவு எளிதானது அல்ல. அது மிக பெரிய வலி. அதை அனுபவித்ததால் இதை சொல்கிறோம். எங்கள் வாழ்க்கை வேறு விதமானது. எங்களை ஒரு எடுத்துக்காட்டாக யாரும் எடுத்து கொண்டு இப்படி விவாகரத்து பெற்றால் தான் புரிதல் வரும் என நினைக்காதீர்கள்” என்று இருவரும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.