நேற்றோடு ஷாருக்கான் பாலிவுட்டில் 31 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவர் 1992 இல் மறைந்த நடிகர் திவ்யபாரதிக்கு ஜோடியாக நடித்த தீவானா திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படம் ஜூன் 25 ஆம் தேதிதான் வெளியாகி இருந்தது. இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், அவர் ட்விட்டரில் Ask SRK என்ற அமர்வை நடத்தினார். அதில் அவரது ரசிகர்கள் சில நகைச்சுவையான கேள்விகளை முன்வைத்தனர்.


தீவானா திரைப்படம் வந்து 31 ஆண்டுகள்


இந்த ஆன்லைன் அமர்வைத் தொடங்கிய, ஷாருக், “தீவானா திரைக்கு வந்து 31 ஆண்டுகள் ஆகிறது என்பதை உணர்ந்தேன். நல்ல பயணம். அனைவருக்கும் நன்றி, இப்போது 31 நிமிடங்கள் #AskSRK நிகழ்வை நடத்தலாமா??" என்று பதிவிட்டு தொடங்கினார். ஒரு நபர் அவரிடம், “தீவானா திரைப்படத்தில் இருந்து உங்களால் மறக்க முடியாத ஒரு விஷயம் எது?” என்று கேட்டார். அதற்கு ஷாருக், "திவ்யா மற்றும் ராஜ் உடன் பணியாற்றியது" என்று பதிலளித்தார். அவரிடம் ஒருவர், “உங்களுடைய இந்த காவியத் திரைப்படத்தை இப்போது பார்க்கும்போது எப்படி இருக்கிறது?" என்று கேட்டார். "31 வருடங்கள் ஆகிவிட்டன, அது இன்னும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.






31 ஆண்டுகளில் செய்த சாதனை என்ன?


‘இந்த 31 ஆண்டுகளில் நீங்கள் செய்த பெருமைக்குரிய சாதனை எது?’ என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு, “நிறைய மக்களை நிறைய முறை மகிழ்விக்க முடிந்தது. அவ்வளவுதான்." என்றார். ஒரு நபர், "நீங்கள் எப்போதும் ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள், இந்த ஆண்டுக்கான ஏதேனும் ஊக்கமளிக்கும் வரிகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்," என்று கூறினார், அதற்கு ஷாருக் "வேலையில் கடினமாக கவனம் செலுத்துங்கள்.... குடும்பத்தை இன்னும் கடினமாக நேசியுங்கள்!" என்றார்.


தொடர்புடைய செய்திகள்: Leo movie song: ’நான் ரெடி’ பாட்டில் ரவுடிசமா..? நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்..!


சிகரெட் புகைக்கலாம் வருகிறீர்களா?


ஒரு நபர் ஷாருக்கிடம், "நாம ரெண்டு பேரும் சேர்ந்து சிகரெட் புகைப்போமா ஷாருக்???” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஷாருக், "எனது கெட்ட பழக்கங்களை நான் தனியே செய்துகொள்கிறேன்!" என்றார். மற்றொரு ரசிகர், "பாலிவுட்டில் பல வருடங்கள் வெற்றியடைந்து, கிட்டத்தட்ட எல்லா வகையான பாத்திரங்களையும் செய்த பிறகு, இப்போது, ஒரு திரைப்படத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அதன் வணிக அம்சத்தைப் பார்க்கிறீர்களா அல்லது நீங்கள் இதுவரை செய்யாத சில பாத்திரங்கள்/படங்களைச் செய்ய விரும்புகிறீர்களா?" என்று கேட்க, ஷாருக் அதற்கு "குறிப்பிட்ட இயக்குனர் என்ன செய்ய விரும்புகிறாரோ அந்த மாதிரியான திரைப்படத்தை நான் இப்போது செய்ய முயற்சிக்கிறேன், நான் என்னை மட்டும் பார்ப்பது அல்ல." என்று பதில் கூறினார்.



ஷாருக்கின் அடுத்தடுத்த திரைப்படங்கள் 


இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான சித்தார்த் ஆனந்தின் பிளாக்பஸ்டர் ஆக்‌ஷன்-த்ரில்லர் படமான பதான் மூலம் 4 வருட இடைவெளிக்குப் பிறகு ஷாருக் கம்பேக் கொடுத்தார். ஷாருக் அடுத்ததாக வரவிருக்கும் ஆக்‌ஷன்-த்ரில்லர் ஜவான் படத்தில் நடிக்கிறார், இது செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வர உள்ளது. தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் உயர்தர ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஷாருக்கின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் டன்கி படத்தில் நடிக்க இருக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி பண்ணு நடிக்கிறார். டன்கியின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.