தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி இடத்தை பிடித்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அசின். உள்ளம் கேட்குமே திரைப்படம் தான் அசின் நடித்த முதல் தமிழ் படம் என்றாலும் அப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது. அதனால் அசின் நடிப்பில் 2004ம் ஆண்டு முதலில் வெளிவந்த படம் M. குமரன் S/O மகாலட்சுமி. தனது 15 வயதிலேயே மலையாள படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் அதற்கு பிறகு தெலுங்கு படத்திலும் அறிமுகமானார்.
M. குமரன் S/O மகாலட்சுமி படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக மலையாள பெண்ணாக கலக்கியிருப்பார். ஜெயம் ரவி அப்படத்தில் அசினை மலபார் என அழைப்பது பெரிய அளவில் பிரபலமானது. முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. கஜினி, சிவகாசி, மஜா, உள்ளம் கேட்குமே, போக்கிரி, தசாவதாரம், வேல் என அடுத்தடுத்து வெளியான அனைத்து படங்களுமே ஹிட் அடித்தன. கிட்டத்தட்ட இரண்டே ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையானார் அசின்.
தமிழில் முன்னணி நடிகையின் அந்தஸ்தில் இருந்த அசினுக்கு ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க பாலிவுட் நடிகையானார். அங்கும் முன்னணி நடிகர்களான அமீர்கான், சல்மான் கான் என ஸ்டார் நடிகர்களின் ஜோடியாக நடித்தார். இப்படி ஒரு கம்ப்ளீட் பான் இந்தியன் நடிகையாக வலம் வந்த அசின் திடீரென மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சர்மாவை 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு பை பை சொன்ன அசின் ஒரு குடும்ப தலைவியாக இருந்து வந்தார். இந்த தம்பதியருக்கு அரின் என ஒரு மகள் உள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அசின் அவ்வப்போது மகளின் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அசின் குறித்த வதந்தி ஒன்று தற்போது இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது. அசின் தனது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய உள்ளார் என்பது தான் அந்த வதந்தி.ராகுல் சர்மாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் அதை அறிந்து அசின் கண்டித்த போதும் ராகுல் அந்த பெண்ணுடன் தொடர்பை கைவிடாததால் கோபத்தில் அசின் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டார் என்றும் தற்போது அவர் மகளுடன் தனது பெற்றோர் வீட்டில் உள்ளார் என்ற செய்தி மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த விவாகரத்து செய்தியை கேள்விப்பட்ட அசின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். "எங்கள் கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறோம். இருவரும் நேருக்கு நேர் காலை உணவை என்ஜாய் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் முற்றிலும் கற்பனையான நியூஸ் ஒன்றை பற்றி அறிந்தோம்.
எங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து எங்களின் திருமணத்தை பற்றி திட்டமிட்ட நேரத்தை இந்த தருணம் நினைவூட்டுகிறது. நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோமென நியூஸ் சுற்றியது. தயவு செய்து வேறு ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள்.
இதற்காக எங்களின் 5 நிமிடத்தை வீணடித்ததில் வேதனை. இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் நண்பர்களே! " என பதிவிட்டு உள்ளார். இந்த ஆதாரமற்ற வதந்திக்கு அசின் ரியாக்ஷன் அவ்வளவே தான்.