Trident Arts நிறுவன தயாரிப்பாளர்  R.ரவீந்திரன் தயாரிப்பில், குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் நாயகனாக நடித்த இந்தப்படத்தை A.ஹரிஹரன் இயக்கினார். இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  பேசிய நடிகர் அஸ்வின் படத்தின் கதை பிடிக்காவிட்டால், தான் தூங்கிவிடுவேன் என்றும்  இதுவரையில் 40 கதைகளை கேட்டு தூங்கியிருக்கிறேன். ஆனால் நான் கதை கேட்டு தூங்காத ஒரே இயக்குநர் ஹரிதான் என இயக்குநரை புகழ்ந்து பேசினார்






அவரது இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. பலரும் அவர் பேசிய வீடியோ எடிட் செய்து ட்ரோல் செய்தனர். இது தொடர்பாக விளக்கம் அளித்த நடிகர் அஸ்வின் “நான் பேசியது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்.” என்றார் அதனைத்தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருந்த என்ன சொல்லப்போகிறாய் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தப்படம் பொங்கலுக்கு வெளியிடப்பட்டது. 






படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், படத்தின் ப்ரோஷனுக்காக Behindwoods யூடியூப் சேனல் அஸ்வினையும், படத்தில் நடித்த தேஜூ அஸ்வினியையும் நேர்காணல் செய்தது. எப்போதும் போல இல்லாமல் சற்று வித்தியாசமாக, அஸ்வினின் ரசிகர்களை அழைத்து வந்து அவர்களின் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. படத்தின் நாயகி தேஜூ அஸ்வினி முன்னமே நேர்காணலுக்காக வந்து காத்திருந்தார். அஸ்வின் வரவில்லை என நிகழ்ச்சி குழு சொல்ல, நேர்காணலை தொடங்கலாம் என தொகுப்பாளினி நிகழ்ச்சியை தொடங்கினார். 


நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு சென்றாலும், அஸ்வின் வராததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் அமர்ந்திருந்தனர். அதை கவனித்த நாயகி யாருமே இங்கே கவனிக்கவில்லை என்றார். இதனையடுத்து, ரசிகர்களுக்கு அங்கு பணிபுரியும் ஒருவர் சமூசா கொடுத்தார்.


இதனையடுத்து பேசிய நாயகி அவர் தற்போது மூன்று நான்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதனால் அவர் வேலையில் மாட்டிக்கொண்டிருப்பார் என்று பேசிக்கொண்டிருக்கும் போது, ரசிகர்களுக்கு சமூசா கொடுத்த பணியாளர், திடீரென்று தனது மாஸ்க்கை கழற்றினார். அவரை பார்த்த ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். காரணம் ரசிகர்களுக்கு ஆபிஸ் பாய் கெட்டப்பில் சமூசா கொடுத்தது நடிகர் அஸ்வின். 


அதனைத் தொடர்ந்து பேசிய அஸ்வின், “ ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்காக வந்த எல்லாத்துக்கும் நன்றி. நிறைய விஷயத்தை கடந்து படம் திரைக்கு வந்துச்சு. நிறைய பேர் நிறைய விஷயங்கள் சொன்னாங்க..நான் ரொம்ப பயந்தேன். தியேட்டர்லதான் நானும் படத்தை முதல் தடவையா பார்த்தேன். படத்தோட ஒவ்வொரு காட்சிகளையும் மக்கள் ரசிச்சு கைத்தட்டினபோது, இதுதான் என்னோட ஃபர்ஸ்ட் பிலிம்ணு தோணுச்சு. அது அப்படி ஒரு மெமரியா இருந்துச்சு..” என்றார்.