அசோக் செல்வன்


தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன்.  அசோக் செல்வன் நடித்த "ஓ மை கடவுளே , போர் தொழில்"  போர் தொழில் ஆகிய படங்கள் அடுத்தடுத்த வெற்றிபெற்றன. சமீபத்தில் இவர் நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகி சிறப்பான வெற்றி பெற்றது. தற்போது மணிரத்னம் இயக்கும் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.


எமக்கு தொழில் ரொமான்ஸ்


அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் எமக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் இசை வெளியீடு நேற்று ஜூலை 27 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. பாலாஜி கேசவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். அவந்திகா மிஷ்ரா நாயகியாக நடித்துள்ளார்.  இந்த நிகழ்ச்சியில் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே செல்வமணி , தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய நிர்வாகிகள் , தயாரிப்பாளர் கே ராஜன் , இயக்குநர் தியாகராஜா குமாரராஜா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.  நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் திருமலை நடிகர் அசோக் செல்வனை கடுமையாக விமர்சித்து பேசினார் 






“ஒரு படத்தை முடிப்பதற்கு மூன்று ஆண்டுகளாக போராடி பணத்தை எல்லாம் ஏற்பாடு செய்து நடிகரையும் நடிகையையும் தேடி அலைவது தான் கொடுமையின் உச்சம். நடிகர் அசோக் செல்வனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டேன். அன்று அவருக்கு 31 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தேன் .இன்று அவருடைய சம்பளம் 2 கோடி 3 கோடி என்கிறார். அவர் வாங்கட்டும். ஒரு இயக்குநரோ தயாரிப்பாளரோ இல்லாமல் எந்த நடிகரும் நடிகையும் இல்லை.


10 தயாரிப்பாளர்கள் செத்த பிறகு தான் ஒரு நடிகர் உச்சத்திற்கு செல்கிறார். தயாரிப்பாளரை திரும்பி பார்க்காத எந்த நடிகரும் உச்சிக்கு போக மாட்டார்கள். இந்த படத்தில் வந்த நடிகர்கள் தான் வந்து படத்தை ப்ரோமோட் செய்ய வேண்டும் .  பிடித்துதானே இந்தப் படத்தில் நடிக்க வந்தீர்கள். ஒரு இரண்டு மணி நேரம் ஒன்றரை மாதமாக அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கோம். ஆனால் சொல்றேன்.. சொன்றேன் என்ரு இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறார். ஒரு இயக்குநருக்கு பலமே நடிகர்கள் தான்” என்று தயாரிப்பாளர் திருமலை தெரிவித்துள்ளார்.