தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் அசோக் செல்வனுக்கும், நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள இட்டேரியில் தமிழ் முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். பின்னர், திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
கோலிவுட்டின் மற்றொரு ஸ்வீட் தம்பதியினர்
ஏற்கெனவே தமிழ் சினிமாவில் பல்வேறு ஸ்வீட்டான நட்சத்திர தம்பதியினர் இருக்கும் நிலையில், அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஜோடி பல்வேறு ரசிகர்களைக் கவர்ந்து வரும் இளம் ஜோடிகளாக உருவாகி இருக்கிறார்கள். தங்களது திருமணத்திற்கு பின் முதன்முறையாக தனியார் செய்து நிறுவனம் ஒன்றுக்கும் பேட்டி அளித்துள்ளார்கள் இந்தத் தம்பதியினர். இதில் தங்கள் திருமணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் எழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கும் விளக்கமளித்துள்ளனர். தனியார் ஊடகத்துக்கு இவர்கள் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:
ஏன் தமிழ் முறை திருமணம்
வழக்கமான ஒரு திருமணமாக இல்லாமல் கிராமங்களில் பாரம்பரிய தமிழ் முறைப்படை நடைபெறும் திருமணம்போல் அசோக் செல்வன் கீர்த்தியின் திருமணம் இருந்தது. இது குறித்து கேட்டபோது பதிலளித்த அசோக் செல்வன் “எனக்கு தமிழ் மொழிமீது நிறைய பற்று இருக்கிறது. அதே போல் கீர்த்திக்கு வழக்கமான ஒரு திருமணமாக தனது திருமணமாக இருக்கக் கூடாது என்று ஆசை இருந்தது.
இதனால் எங்களது திருமணத்தை மண்டபத்தில் நடத்த வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். சரி வீட்டில் திருமணம் செய்துகொள்ளலாம் என்றால் அவ்வளவு பெரிய வீடு எங்களிடம் இல்லை. கீர்த்தியின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இருக்கும் விவசாய நிலத்தில் எங்கள் திருமணத்தை நடத்த திட்டமிட்டோம்.
கு.ஞானசம்பந்தம் அவர்களின் பேச்சு எனக்கு பிடிக்கும். என் அம்மா வழியாக அவரிடம் பேசி அவரை நேரில் சென்று சந்தித்து எங்களது திருமணத்தை தமிழ் முறைப்படி செய்து தர கேட்டுக் கொண்டோம். அவரும் சம்மதித்தார். பொதுவாகவே கல்யாணங்களில் எல்லாரும் வந்து அவரவர் வேலைகளை பார்த்துவிட்டு செல்வது மாதிரி இல்லாமல் வந்தவர் எல்லாரையும் உற்சாகப்படுத்தும் வகையில் இந்த திருமணம் இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்” என்றார்.
அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி பாண்டியன் குறித்து பல்வேறு கேலியான மற்றும் நெகட்டிவ் கருத்துக்கள் இணையதளத்தில் பகிரப்பட்டன.
அவர்களைப் பார்க்க எனக்கு பாவமாக இருந்தது!
இது தொடர்பாக பேசிய அசோக் கீர்த்தி தம்பதியினர், “மக்களிடம் ஒரு திறமை இருக்கிறது ஒரு அழகான விஷயத்தை மிக எளிதாக கெடுத்துவிடக் கூடியவர்கள். அதை அவர்கள் தெரிந்து செய்கிறார்களா தெரியாமல் செய்கிறார்களா என்று தெரிவில்லை ஆனால் இது நடக்கதான் செய்கிறது.
பொதுவாகவே நான் போட்டோக்களுக்கு வரும் கமெண்ட்ஸை பார்க்க மாட்டேன். அசோக் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. பிறகு என்னுடைய நண்பர்கள் எல்லாம் எனக்கு கால் செய்து நான் நன்றாக இருக்கிறேனா என்று கேட்டபோது தான் என்னுடைய தோற்றத்தைப் பற்றியும், நிறத்தை பற்றியும் பலவிதமான கருத்துக்கள் வந்திருக்கின்றன என்பது எனக்கு தெரிந்தது.
ஆனால் என்னை விமர்சித்த பெண்களுக்கு எதிராக பல ஆண்கள் எனக்கு ஆதரவாக பதிலளித்திருந்தார்கள் என்பதை பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாகவே ஒருவரின் உருவத்தைப் பற்றிய இந்த மாதிரியான கருத்துக்களை ஒருவர் சொல்கிறார் என்றால் அது அவர்களின் மனதில் இருக்கும் தாழ்மையுணர்ச்சியில் இருந்து தான் வருகிறது என்று நான் நினைக்கிறேன். என்னை ஆதரித்த நிறைய ஆண்கள் கமெண்ட் செய்த பெண்களை தாக்கியும் இருந்தார்கள். அதற்காக அந்த பெண்களை நினைத்து நான் வருத்தப்பட்டேன்“ என்று கீர்த்தி பாண்டியன் பேசியுள்ளார்.